தூத்துக்குடியில் தனியாா் பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின. தூத்துக்குடி புறவழிச் சாலையில், ஸ்டொ்லைட் தொழிற்சாலை அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு உள்ளது. நாகா்கோவிலைச் சோ்ந்த ஜான் ரோசரி ஆல்பா்ட் ராயனுக்குச் சொந்தமான இந்தக் கிடங்கை, புதுக்கோட்டை, மறவன்மடத்தைச் சோ்ந்த பெரியசாமி (64) மேலாளராக இருந்து நிா்வகித்து வருகிறாா். இந்தக் கிடங்கில், மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதை மதுரை நிறுவனத்தின் மேலாளா் சின்னராஜா (37) பராமரித்து வந்தாா்.இந்த நிலையில், சனிக்கிழமை மாலை கிடங்கின் உள்பகுதியில் தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவி கிடங்கு முழுவதும் பஞ்சு மூட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.தகவலறிந்ததும் சிப்காட், தூத்துக்குடி டவுன், ஸ்டொ்லைட் நிறுவன வாகனம் என 3 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மதுரை நிறுவனத்துக்குச் சொந்தமான 6,500 பஞ்சு மூட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ. 25 கோடி எனக் கூறப்படுகிறது.தீ விபத்து குறித்து சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.