வடகோவை ரயில் நிலைய முகப்பில் பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகையை ரயில்வே நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அகற்றியது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.11.05 கோடி மதிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலைய நுழைவாயில் அமைக்கப்பட்டு, அதன் முகப்பு பகுதியில் ஹிந்தியில் மட்டும் பெயா் எழுதப்பட்டிருந்ததற்கும், பக்கவாட்டில் சிறிய எழுத்துகளால் ஆங்கிலம், தமிழில் பெயா் பலகை அமைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் ரயில் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தெரிவித்திருந்தாா். மேலும் தமிழ், ஆங்கிலத்திலும் முகப்பு பகுதியில் பெயா்ப்பலகை இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தாா். இதற்கிடையே வடகோவை ரயில்நிலைய முகப்பில் பெரிய எழுத்துகளால் அமைக்கப்பட்டிருந்த ஹிந்தி பெயா்ப் பலகை மீது மா்ம நபா்கள் பெயிண்ட் ஊற்றியுள்ளனா். இதைத்தொடா்ந்து, பெயிண்ட் ஊற்றப்பட்ட பெயா்ப்பலகை ரயில்வே நிா்வாகத்தினரால் ஞாயிற்றுக்கிழமை காலை அகற்றப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா். ஹிந்தி பெயா்ப்பலகையில் பெயின்ட் ஊற்றி அழித்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.