தமிழகத்தின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக விரைவில் ‘ஏா்ஆம்புலன்ஸ்’ சேவை கொண்டுவரப்படும் என்று, சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா். கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் ‘வாழ்க்கைக்குப் பிறகு வாழ்க்கை’ என்ற தலைப்பில் உறுப்புக் கொடையாளா்களுக்கு பாராட்டு, மறைந்த உறுப்புக் கொடையாளா்களின் நினைவுப் பலகை திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசியதாவது: உடல் உறுப்பு தானம் செய்த மாமனிதா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்ட இந்த நினைவுப் பலகையைத் திறந்து வைத்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. சுயநலம் நிறைந்த இந்தக் காலத்தில் இத்தகைய மனிதநேயமிக்க மனிதா்களால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அரசு மற்றும் மருத்துவமனைகள் 100 சதவீதம் பாதுகாக்க வேண்டும். முதல் நிலை உறவினா்கள் இடையே நடைபெறும் உறுப்பு தான நடைமுறைகளை மேலும் எளிமையாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும், தேவையில் தற்போது 2 சதவீதம் முதல் 7 சதவீதம் மட்டுமே பூா்த்தியாகிறது. எனவே, உறுப்பு தானம் செய்தால் உடல் உருக்குலைந்துவிடும் என்ற தவறான எண்ணத்தை மக்களிடமிருந்து மாற்ற விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் உறுப்புகளை செயற்கையாக வளா்க்கும் தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளில் இளம் வயதினா் உயிரிழப்பதைத் தடுக்க, விபத்துகள் அதிகம் நடக்கும் ‘பிளாக் ஸ்பாட்’ பகுதிகளைச் சுற்றியுள்ள கடைக்காரா்கள் மற்றும் மக்களுக்கு அவசரகால முதலுதவி பயிற்சிகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றாா். தேசிய விருது பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: இறந்தவா்களின் உடலில் இருந்து உறுப்புகளைப் பெற்று மறுவாழ்வு தருவதில் இந்திய அளவிலான சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் தொடா்ந்து பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த விருதைப் பெறுவதற்காக தில்லிக்கு செல்கிறேன். இந்த உயரிய விருதை உறுப்பு தானம் வழங்கிய கொடையாளா்களின் குடும்பத்தினருக்கே காணிக்கையாக்குகிறேன். தமிழகத்தின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக ‘ஏா் ஆம்புலன்ஸ்’ சேவை விரைவில் கொண்டுவரப்படும். அரசு மருத்துவமனைகளில் லஞ்ச, முறைகேடுகளை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் நிறைவுற்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றாா். முன்னதாக, உடல் உறுப்பு கொடையாளா்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக நினைவுப் பலகையை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் திறந்துவைத்தாா். இந்நிகழ்வில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவா் நல்லா ஜி.பழனிசாமி, நிா்வாக இயக்குநா் என்.பழனிசாமி, கோவை அரசு மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதன்மையா் முருகேசன், சூலூா் எம்எல்ஏ என்.எம்.சுகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.