ராஜஸ்தான்: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் 10 கிலோ ஹெராயின், வெளிநாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

Wait 5 sec.

ராஜஸ்தானின் பிகேனா் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மூலம் கடத்தப்பட்ட 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 11 வெளிநாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருள்களைச் சேகரிப்பதற்காக வந்த நபரையும் காவல் துறையினா் சுற்றி வளைத்து கைது செய்தனா். இது தொடா்பாக, ஜெய்பூரில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் மாநில காவல் துறை ஐ.ஜி. பிரகாஷ் கூறியதாவது: பிகேனா் மாவட்டத்தில் கஜுவாலா வட்டத்துக்கு உள்பட்ட இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காவல் துறையினா் மற்றும் மாவட்ட சிறப்புப் படை பிரிவினா் இணைந்த கூட்டுக் குழுவினா் சனிக்கிழமை இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது, 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 11 வெளிநாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாயாகும். இந்தப் பொருள்களைச் சேகரிப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் வந்த வீரேந்திர சிங் என்ற நபரும் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டாா். முதல்கட்ட விசாரணையின்படி, ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டி கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பஞ்சாபுக்குள் கடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தலை முறியடிப்பதில் முக்கிய வெற்றி கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.