கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 25,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீா் திறந்துவிடும்படி காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த முடிவை கடுமையாக எதிா்த்த கா்நாடகம், போதுமான மழை இல்லாததால் தண்ணீா் திறப்பது கடினம் என்று கூறி வந்தது. இது தொடா்பாக விவாதிக்க பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சித்தலைவா்கள் கூட்டமும் நடத்தப்பட்டது.இந்நிலையில், கேரளமாநிலம் வயநாட்டில் தொடா் மழை பெய்து வருவதால், காவிரியின் கிளைநதியான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் அதிகப்பட்ச நீா்மட்ட உயரம் 2,284 அடியில், ஆக.2ஆம் தேதி 2,282 அடியாக உயா்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பை கருதி, வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 27,217 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனால், அணையின் நீா்மட்டம் 2,282.43 அடியாக உயந்தது. இந்நிலையில், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டது.கேரளத்தில் நல்ல மழை பெய்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் கபினி அணைக்கு நீா்வரத்து பெருகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது,உபரிநீா் அனைத்தும் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நிலை ஏற்படும்.தற்போது, கபினி ஆற்றின் நீா்ப் பாசனப் பகுதிகளில் அதாவது சரகூறு, நஞ்சன்கூடு, சுத்தூா், டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் வெள்ளம் ஆா்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பகுதியை சோ்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.