ச. ரபீக் மனிதனின் அடிப்படைத் தேவைகளின் முதல் நண்பன் உணவு. உணவின் மகத்துவத்தை மனிதர்களுக்கு தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. பசி என்னும் அரக்கன் அதை அழகாக மனிதருக்கு புரிய வைத்து விடுகிறான். உலகம் முழுவதும் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் அதிகமாகும். உலக மக்களில் 11-இல் ஒருவர் தங்களின் இரவு உறக்கத்தை உணவின்றி தொடங்குகின்றனர். உணவுக்கான போராட்டம் என்பது உலகில் அறிவிக்கப்படாத ஒரு யுத்தமே.உணவுத் தேடலும் மதிப்பீடும் வயிற்றுப் பசிக்காக உணவைத் தேடும் மக்களுக்கு மத்தியில், நாவின் சுவைக்காகவும் சமூக வலைதள மதிப்பீடுகளுக்காகவும் உணவைத் தேடும் ஒரு விநோத உணவுப் பண்பாட்டை இப்போது காண முடிகிறது. இவர்களின் தேடல் வயிற்றுக்காக அல்ல. தங்களின் கேமராக்களின் கண்களுக்காக. இத்தகு மனிதர்கள் நடைபாதை சிற்றுண்டி கடை முதல் நட்சத்திர உணவகங்கள் வரை தனது உணவுத் தேடலை விரிவுபடுத்திக் கொண்டவர்கள்.நல்ல உணவைத் தேடிச் செல்வதில் என்ன குற்றம் எனக் கேட்கும் சிலரின் முணுமுணுப்புகள் என் காதுகளுக்கும் எட்டுகிறது. நல்ல உணவைத் தேடுவது தவறல்ல. ஆனால், உணவுத் தேடல் என்ற பேரில் சில நூறு மைல்கள் கடந்து சென்று உணவுக்கு விளம்பரம் தரும் இந்த விநோத பண்பாடு எப்படி சரியாகும்? உங்கள் நாவுக்கு சுவையேற்றுவதாக நினைத்து அதை கேமரா கண்களுக்கு விருந்தாக்கி சமூக ஊடகங்களில் பகிரும் பழக்கம் பண்பாட்டுப் பிழையே.சிற்றுண்டி உண்பதையே சிறு குற்றமாக கருதிய சமூக வரலாறுகள் நம் தமிழ்நாட்டில் இருந்தன. அம்மா கைப்பக்குவம் குறித்து மணிக்கணக்கில் பேசும் முந்தைய தலைமுறைகளை இன்றும்கூட காணலாம். ஆனால், அதற்குப்பின் வந்த தலைமுறைகளுக்கு மட்டும் வெளி உணவே எப்படி அமிர்தமானது? சற்று சிந்தியுங்கள். வெளியூர் செல்லும் போதுகூட பிள்ளைகளுக்கு புளியோதரை கட்டி தந்த அம்மாக்களை இன்று காண முடிவதில்லை. கைப்பேசியில் உள்ள செயலிகளுக்குள் குழந்தைகளுக்கு தன் கைப்பக்குவத்தை காட்டும் நிலையில் உள்ளது இன்றைய உணவுப் பண்பாடு. மொத்தத்தில் உணவுச் சங்கிலிகளின் சிறைக்குள் மனிதன் சிக்குண்டு தவிக்கிறான்.உணவு விநியோகம் செய்யும் தொழில் குறித்து பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? இந்தியாவில் உணவு விநியோகத்தின் மூலம் மட்டும் சில ஆயிரம் கோடி நிகர லாபம் பெறுகின்றன உணவு விநியோக நிறுவனங்கள்.நள்ளிரவு நடைபாதை உணவகங்கள் நடைமுறைக்கு வந்தது எப்போது? என்றும், இவற்றை நம் வீட்டு இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்தவர் யார் என்று சற்றே சிந்தித்தால் சமூக ஊடக காணொலிகள்தான் அதன் ஆணிவேராக இருக்கும். நள்ளிரவில் நாவுக்கு விருந்து படைக்கும் இந்தப் பழக்கம் வயிற்றுப் பசியைப் போக்கவா?, இல்லை வலைதளப் பசியைப் போக்கவா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.உணவை எப்படிச் சமைப்பது? என்று சொன்ன ஊடகங்கள் இன்று உணவை எங்கு சாப்பிடுவது? என வழிகாட்டும் நிலை சரிதானா? வெளி உணவு என்பது வெறுக்கத்தக்கது என்பதல்ல. அவை என்றும் வீட்டுப் பக்குவத்தை பெறப் போவதில்லை என்பதுதான் இங்கு வாதம். தவிர்க்க இயலாத நிலையில் வெளியில் சென்று உண்பதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது. அதே வேளையில் வீட்டில் சமைப்பதைத் தவிர்த்து வெளியில் சென்று உண்பதுதான் கௌரவம் என கருதும் சமூக நிலைப்பாடு எப்படி சரியாக இருக்க முடியும்?சுகாதாரமற்ற வெளி உணவை அதிகம் சாப்பிடுவதால் உடல் நலன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இருதய குழாய் அடைப்பு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் சுகாதாரமற்ற வெளி உணவை சாப்பிடுவதால் ஏற்படுகின்றன. இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளில் வணிக நோக்கத்துக்காக ரசாயன சுவையூட்டிகளும், பதனப் பொருட்களும் கொண்டு கையாளப்படுவதால் அத்தகைய உணவு மெல்லக் கொல்லும் நச்சாகவே மாறிவிடுகின்றன. சுகாதாரமற்ற வெளி உணவுகளில், பதப்படுத்தப்பட்ட உணவு என்பவை மனித உயிர்களைப் பதம் பார்க்கும் உணவு என்பதை நாம் மறந்து விடமுடியாது. வெளி உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் நெகிழிப் பைகள் உடலுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் சவாலே.அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத் துறை போராசியர் அமி ஜேட்டா வெளியிட்ட ஆய்வில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன. வெளி உணவுகளை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பொருள்களில் தாலேட் என்ற வேதி கூட்டுப்பொருள் உள்ளது. அது மகப்பேறு சார்ந்த நோய்களைத் தூண்டும் முக்கியக் காரணி எனவும் இவ்வறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தைகள், கருவுற்ற பெண்கள், இளம் தலைமுறையினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.சாலையோரக் கடையிலும் சரி, பெரிய உணவகங்களிலும் சரி, சுகாதாரமற்ற உணவு விற்பனை குறித்த செய்திகளை அடிக்கடி காண முடிகிறது. உணவு பாதுகாப்புத் துறை நடத்தும் களஆய்வுகளும் இதை உறுதி செய்கின்றன. புற்றீசல்போல் பெருகிக் கிடக்கும் வெளி உணவகங்களை அரசு மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் சாத்தியமில்லை. தரமற்ற உணவைத் தரும் இத்தகைய உணவகங்களை விளம்பரப்படுத்தும் சமூக வலைதளப் பதிவுகளை நிறுத்தினாலே வெளி உணவின் தரத்தில் தாழ்ந்தவை மறைந்து போகும். அப்போதுதான், இந்த உணவுப் பண்பாடு உன்னத பண்பாடாக சமுதாயத்தில் உலா வரும்.