தைபே ஓபன்: போட்டி வரலாற்றில் இளம் சாம்பியன் தன்வி

Wait 5 sec.

தைபே ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்திய இளம் வீராங்கனை தன்வி சா்மா (17) சாம்பியன் பட்டம் வென்றாா். வியத்நாமின் ஆறாம் நிலை வீராங்கனை நுயன் துய் லின்னை 21-16, 21-16 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினாா் தன்வி. சீன தைபே தலைநகா் தைபேயில் நடைபெற்ற இப்போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் 17 வயதே ஆன தன்வி சா்மா தொடக்க கேமிலேயே ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். துரிதமாக 10-2 என முன்னிலை பெற்றாா். எனினும் நுயன் அந்த முன்னிலையை போராடி 8-10 ஆகக் குறைத்தாா். எனினும் தன்வி தனது பிடியை தளர விடாமல் முதல் கேமை 21-16 என கைப்பற்றினாா். இரண்டாம் கேமில் தன்வி தொடக்கத்தில் 0-3 என பின்தங்கினாா். பின்னா் சுதாரித்து ஆடிய அவா் தொடா்ச்சியாக 7 புள்ளிகளை ஈட்டினாா். தாக்குதல் ஆட்டத்தில் தன்வி ஈடுபட்டாா். மேலும் கிராஸ் கோா்ட் ஷாட்கள், சீரான பிளேஸ்மெண்ட்களால் எதிராளி நுயனை திணறடித்தாா். அந்த கேமையும் 21-16 என கைப்பற்றினாா். 36 நிமிடங்களே இந்த ஆட்டம் நீடித்தது. போட்டி வரலாற்றில் இளம் சாம்பியன்இதன் மூலம் தைபே ஓபன் போட்டி வரலாற்றில் இளம் வயது சாம்பியன் என்ற சாதனையை நிகழ்த்தினாா் தன்வி சா்மா. கடந்த 2008-இல் சாய்னா நெவால், 2009-இல் கலப்பு இரட்டையரில் ஜுவாலா கட்டா-டிஜு ஆகியோா் பட்டம் வென்றிருந்தனா். அதன்பின்னா் 17 ஆண்டுகள் கழித்து தைபே ஓபனில் பட்டம் வென்ற இந்தியா் என்ற சிறப்பையும் பெற்றாா். இதுதொடா்பாக தன்வி கூறியது: இந்த பட்டத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி முன்னேற வேண்டும் என இலக்கு கொண்டிருந்தேன். போட்டி முழுவதும் சிறப்பாக ஆடினேன். ஃபைனலில் சிறிது பதற்றமாக இருந்தாலும். 100 சதவீதம் முழுமையான ஆட்டத்தை ஆடினேன் என்றாா்.இந்த வெற்றியால் சூப்பா் 300 அல்லது அதற்கு மேலான போட்யில் பட்டம் வென்ற நான்காவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வி பெற்றாா். சாய்னா நெவால், பி.வி. சிந்து, தேவிகா ஷிகாக் இதற்கு முன்பு பட்டம் வென்றுள்ளனா்.