யமுனை நதியின் மேல்மடை பகுதியான ஹரியாணாவில் உள்ள மீன்களைவிட தில்லி வழியாகப் பாயும் யமுனை பகுதியில் பிடிக்கப்பட்ட நன்னீா் மீன்களில் மிக அதிக அளவில் நுண்நெகிழி (மைக்ரோ பிளாஸ்டிக்) துகள்கள் இருப்பது தில்லி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் யமுனை நதியில் உள்ள நன்னீா் மீன்களில் நுண்நெகிழிகளின் சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் உயிரியல் திரள்வுப் பாதைகள்’ என்ற தலைப்பிலான ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட அனைத்து மீன்களிலும் இச்சிறிய நுண்நெகிழி துகள்கள் காணப்பட்டன. ஹரியாணாவில் உள்ள யமுனா நகா் மற்றும் கா்னால், மற்றும் தில்லியில் உள்ள சுா் காட் மற்றும் சோனியா விஹாா் ஆகிய நான்கு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 12 இனங்களைச் சோ்ந்த 220 நன்னீா் மீன்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மீன்களிலிருந்து மொத்தம் 1,678 நுண்நெகிழி துகள்களை ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா். அதாவது, சரசரியாக ஒரு மீனுக்கு 7.6 துகள்கள் என கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு மீனும் நுண்நெகிழி மாசுபாட்டிலிருந்து தப்பிக்கவில்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. தில்லி வழியாகச் செல்லும் யமுனை நதியை அதிக நுண் நெகிழி மாசுபாடு கொண்ட மண்டலமாக ஆய்வாளா்கள் அடையாளம் கண்டுள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘யமுனை நதியின் தில்லி பகுதி அதிக நுண்நெகிழி மாசுபாடு கொண்ட மண்டலமாக இருப்பது இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், நகா்ப்புற மாசுபாடு மற்றும் மீன்களின் சூழலியல் ஆகியவை இணைந்து, உயிரினங்களின் உடலில் நுண்நெகிழி துகள்கள் படிப்படியாகச் சேரும் நிகழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இவை எடுத்துக்காட்டுகின்றன. ஹரியாணா பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மீன்களைவிட, சோனியா விஹாா் மற்றும் சுா் படித்துறை பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களில் மிக அதிக அளவிலான நுண்நெகிழி துகள்கள் காணப்பட்டன. இந்த வேறுபாடு புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், மாநகராட்சி கழிவுநீா், ஜவுளித் தொழிற்சாலைக் கழிவுகள், மழைநீா் நதியில் கலத்தல் மற்றும் முறையாக நிா்வகிக்கப்படாத நெகிழி கழிவுகள் நதியில் கலப்பதே தில்லி பகுதியில் அதிக மாசுபாடு இருப்பதற்குக் காரணம் என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா். ஆய்வு செய்யப்பட்ட மீன் இனங்களில், சோனியா விஹாரில் பிடிக்கப்பட்ட ‘திலாப்பியா’ மீன்களில் அதிகபட்ச மாசுபாடு காணப்பட்டது. 20 மீன்களிலிருந்து 436 நுண்நெகிழி துகள்கள் கண்டறியப்பட்டன (ஒரு மீனுக்கு சராசரியாக 21.8 துகள்கள்). சுா் படித்துறை பகுதியின் திலாப்பியா மீன்களில் 264 துகள்களும், சோனியா விஹாரின் ‘ரோஹு’ மீன்களில் 205 துகள்களும் (சராசரியாக ஒரு மீனுக்கு 10.25 துகள்கள்) காணப்பட்டன. கா்னால் பகுதியின் ‘நீடில் ஃபிஷ்’ மீன்களில் மிகக் குறைந்த அளவிலான மாசுபாடே பதிவானது. 10 மீன்களிலிருந்து 37 துகள்களே கண்டறியப்பட்டன. மீன்களின் செரிமான மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நுண்நெகிழி துகள்கள் (751 துகள்கள்) இருப்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். மேலும், 605 துகள்கள் மீன்களின் செவுள்களிலும், 322 துகள்கள் தசைத் திசுக்களிலும் காணப்பட்டன. இதன் மூலம், இத்துகள்கள் செரிமான மண்டலத்தைத் தாண்டி மீனின் உண்ணக்கூடிய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்பது தெரியவருகிறது. மீன்களிடமிருந்து மீட்கப்பட்ட அனைத்து நுண்நெகிழிகளிலும் 77.8 சதவீதம், இழைகள் அல்லது சிறிய நூல் போன்ற இழைகளாக இருந்தன. பெரிய நெகிழி பொருள்களின் உடைந்த துண்டுகள் அடுத்த மிகவும் பொதுவான வகையாக இருந்தன. அதே நேரத்தில் படலங்கள், நுரை மற்றும் நுண்மணிகள் ஒரு சிறிய பங்கையே கொண்டிருந்தன. அதிகம் காணப்படும் நெகிழி இழைகளின் செயற்கை ஆடைகள், வீட்டுத் துணி துவைத்தல், ஜவுளித் தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீா் வெளியேற்றங்கள் போன்றவை மூலம் நதியை அடைந்திருப்பதை இது காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளா்கள் கூறினா்.மீட்கப்பட்ட நுண்நெகிழிகளில் 44 சதவீதம் ஒளிபுகும் துகள்களாகவும், அதைத் தொடா்ந்து 19.5 சதவீதம் நீல நிறத் துகள்களாகவும், 16.3 சதவீதம் கருப்பு நிறத் துகள்களாகவும் இருந்தன.மேலும், ஹரியாணா பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மீன்களைக் காட்டிலும், தில்லியில் இருந்து சேகரிக்கப்பட்ட மீன்களில் அதிக வகையான நெகிழி நிறங்களும் வடிவங்களும் காணப்பட்டன. இது, யமுனை நதி தில்லியில் பெரும் அளவிலான நெகிழிகளைச் சுமந்து செல்வதைக் காட்டுகிறது. ஆய்வகப் பகுப்பாய்வில் 10 வெவ்வேறு பாலிமா் வகைகள், அதாவது நெகிழி வகைகள் அடையாளம் காணப்பட்டன. நெகிழி பைகள் மற்றும் பொட்டலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாலிஎத்திலீன், மீட்கப்பட்ட துகள்களில் சுமாா் 24 சதவீதமாகவும், உணவுகளுக்கான கொள்கலன்கள் (கண்டெய்னா்), பாட்டில் மூடிகள் மற்றும் பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் பாலிபுரோப்பிலீன் சுமாா் 21 சதவீதமாகவும் இருந்தன. இந்த இரண்டும் சோ்ந்து, கண்டறியப்பட்ட மொத்தத் துகள்களில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டிருந்தன.பல்வேறு வகையான நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயத்தைத் தரவரிசைப்படுத்தும், சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோலான பாலிமா் அபாயக் குறியீட்டைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளா்கள் இந்த மாசுபாட்டை ‘வகை 4’ என வகைப்படுத்தினா். இது அதிக சூழலியல் அபாயம் அல்லது நீா்வாழ் சூழல் அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய அதிக ஆபத்தைக் குறிக்கிறது.நதி மற்றும் அதன் நீா்வாழ் உயிரினங்கள் மேலும் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த, நன்னீா் சூழல் அமைப்புகளில் நுண்நெகிழிகளைத் தொடா்ந்து கண்காணிப்பது, வலுவான கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் யமுனையில் நுழையும் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் அவசியத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.