வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆண்டனியும் கிளியோபாட்ராவும்

Wait 5 sec.

வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆண்டனியும் கிளியோபாட்ராவும்- தமிழில்: மோகன ரூபன், பக். 224, ரூ. 220, அபிநயா பிரசுரம், சென்னை-600 017. ✆ 97910 71218.வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய 37 நாடகங்களில் 1606 - 1607-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட ஆண்டனி, கிளியோபாட்ரா மிகவும் பிரபலமானது.ரோமப் பேரரசின் உயர்நிலை அதிகார மையமாக இருந்த டிரயம்வேர் அமைப்பின் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆண்டனி. ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்பட்ட பிறகு அவரது வளர்ப்பு மகனான அக்டேவியஸ் சீசர் ரோமப் பேரரசின் மன்னரானார். ஜூலியஸ் சீசரால் போரில் தோற்கடிக்கப்பட்டு உயிரிழந்த பாம்பேயின் மகன் செக்ஸ்டஸ் பாம்பே ரோமப் பேரரசை அச்சுறுத்தி வந்தார். இதனிடையே, எகிப்து நாட்டை வெற்றி கொள்ள ஆண்டனி ரோமானியப் படையுடன் அனுப்பப்பட்டார்.அப்போது, எகிப்தை ஆண்ட மன்னர் தாலமியின் மகளான கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி அவள் மீது ஆண்டனி காதல் கொண்டார். இதனால், தான் பொறுப்பேற்ற கடமையை மறந்து காதலில் திளைத்ததால், ரோம் நகரில் மக்களிடையே ஆண்டனிக்கு எதிராக அதிருப்தி உருவானது.அவர் ரோமுக்கு திரும்பிய போது, அங்கு நிலவிய அரசியல் சூழல், ஆண்டனி - ஆக்டேவியா திருமணம், ஆண்டனி திருமணத்தால் கிளியோபாட்ரா எடுக்கும் முடிவுகள், ரோமப் பேரரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கடற்கொள்ளையர்கள், இறுதியில் ஆண்டனி, கிளியோபாட்ராவின் மரணங்கள் என பலமுனை நிகழ்வுகளை வில்லியம் ஷேக்ஸ்பியர் திறம்பட எடுத்துக்காட்டியுள்ளார்.இந்த நாடகத்தை அதன் மூல வடிவில் வாசிக்கும் போது ஏற்படும் அனுபவம் சிறிதும் குறையாமல் தமிழில் எழுத்தாளர் மோகன ரூபன் மொழிபெயர்த்துள்ளார். இவர் ரோமியோ ஜூலியட், மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ், ஹாம்லெட், கிங் லியர், மாக்பத், ஒத்தெல்லோ ஆகிய நாடகங்களையும் மொழிபெயர்த்துள்ளார்.