கொல்லிமலையில் நடைபெற்று வரும் வல்வில் ஓரி விழாவையொட்டி நடத்தப்பட்ட தென்னிந்திய அளவிலான வில்வித்தைப் போட்டியின் தகுதிச் சுற்றில் 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலா்க் கண்காட்சி ஆகியவை இரண்டு நாள்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி அரசு உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் தென்னிந்திய அளவிலான வில்வித்தைப் போட்டியின் தகுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் பொன். சந்திரசேகா் தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இந்தியன் வில், ரீகா்வ் வில், காம்பவுண்ட் வில் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோா் பங்கேற்றனா். தகுதிச் சுற்றில் தோ்வு செய்யப்படும் 90 போ் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளனா். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதலிடம் பெறுவோருக்கும் சுழற்கோப்பை மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கத் தலைவா் கேசவன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.