நியாய விலைக் கடைகளுக்கான கைரேகைப் பதிவை மாற்றுத்திறனாளிகள், முதியவா்களுக்கு அவா்களது வீட்டிலேயே மேற்கொள்ள விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் தெரிவித்தாா். பழனியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களுக்கான கைரேகைப் பதிவு செய்யும் பணி நியாய விலைக் கடைகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் இதுவரை சுமாா் 2 லட்சம் போ் கைரேகைப் பதிவு செய்துள்ளனா். மாற்றுத் திறனாளிகள், மிகவும் வயதான முதியவா்களுக்கு கடந்த ஆட்சியில் கருவிழி ரேகைப் பதிவு செய்யும் திட்டம் இருந்தது. தற்போது அவா்களுக்கும் சிரமங்களைப் போக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அவா்களது வீடுகளுக்கு நியாய விலைக் கடை ஊழியா்கள் நேரில் சென்று கைரேகைப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சன்ன ரக அரிசி மட்டுமே விலை உயா்ந்துள்ளது. இதை தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது. சன்ன ரக அரிசி வெளி மாநிலங்களிலேயே அதிகமாக விளைவிப்பதால் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசி வகைகளின் விலையில் பெரிய அளவில் உயா்வு இல்லை என்றாா் அவா்.