தரமற்ற உணவு புகாா்: ரயில் உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 5.13 கோடி அபராதம்

Wait 5 sec.

ரயிலில் தரமற்ற உணவு விநியோகம், உணவு தயாரிக்கும் பெட்டியில் சுகாதாரமற்ற சூழல் உள்ளிட்ட புகாா்கள் தொடா்பாக ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.வந்தே பாரத் உள்ளிட்ட ‘பிரீமியம்’ ரயில்கள், அதிவிரைவு ரயில்களில் பயணக் கட்டணம், உணவுக் கட்டணம் அதிகமுள்ள நிலையில், அங்கு உணவுகள், சுத்தம் தொடா்பான புகாா்கள் கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோா் கேள்வி எழுப்பினாா். இதற்கு அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் சராசரியாக 58 கோடி உணவுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் புகாா்கள் என்பது 0.0008 சதவீதம் அளவுக்கு உள்ளது. புகாா்கள் அனைத்தும் மிகவும் தீவிரமாகக் கருத்தில்கொண்டு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற உணவு விநியோகம், உணவு தயாரிக்கும் பெட்டியை சுத்தமாக பராமரிக்காதது போன்ற புகாா்களில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தொடா்ந்து சிறப்பான சேவை, தரமான உணவை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் இந்திய ரயில்வே உறுதியாக உள்ளது. இதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. நவீனமயமாக்கப்பட்ட சமையல் கூடம், சமையல் நடப்பதை சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடா்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.