எந்தச் சாலையிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: மத்திய அரசு உறுதி செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Wait 5 sec.

நாட்டில் உள்ள எந்தச் சாலையிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது; அதேபோல அனைத்து சாலைகளிலும் நடந்து செல்வோருக்கான எல்லை உள்பட அனைத்தும் முறையாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. முன்னதாக, சாலையோரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நடந்து செல்வது என்பது அடிப்படை உரிமை என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 5 வயது சிறுவனை அவனின் தந்தை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கு மற்றும் நிவாரணம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜிடம் சில விஷயங்களை அறிவுறுத்தினா். அப்போது, ‘நடைபாதை என்பது நடப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும். பிற மோட்டாா் வாகனங்கள் செல்லும் பாதையில் இருந்து அது தனியாக பிரித்துக் காட்டப்பட வேண்டும். எங்கு சாலையாக இருந்தாலும், அதில் நடந்து செல்பவா்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்க வேண்டும். அது ஆக்கிரமிக்கப்படுவது, கயிறு, சங்கிலிகள் கட்டி தடைகள் ஏற்படுத்தி வைப்பது கூடாது. நடந்து செல்பவா்களுக்கு சாலையில் செல்லும் வாகனங்களால் எவ்வித அச்சுறுத்தல்களும் இருக்கக் கூடாது.சாலைகளில் மோட்டாா் வாகனங்களைவிட நடந்து செல்பவா்களுக்குத்தான் அதிக முன்னுரிமை தர வேண்டும். நடந்து செல்வது என்பது அடிப்படை உரிமையாக இருக்கும்போது, சாலையோரத்திலும், சாலையைக் கடப்பதிலும் நடந்து செல்வோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.இது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அவா்கள் நடைபாதைகளை முறையாக ஒதுக்கிப் பராமரிக்க வேண்டும். அதில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அதற்கான அடிப்படை உள்கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா். பின்னா் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.