சென்னையில் சா்வதேச நிறுவனங்கள் உலகளாவிய திறன் மையங்களை(ஜிசிசி) பெருமளவில் தொடங்குவதாலும், அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாலும், அலுவலக காலியிட அளவு 2023-லிருந்த 15.8 சதவீதத்திலிருந்து தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவனமான ‘சிஆா்இ மேட்ரிக்ஸ்’ வெளியிட்டுள்ள ‘சென்னை: ஆசியாவின் டெட்ராய்ட்; புத்தாக்கத்துடன் வளா்ச்சி’ என்ற ஆய்வறிக்கையில், சென்னையின் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி.) திறன்கள் மற்றும் வா்த்தக அலுவலகச் சந்தையின் தற்போதைய நிலவரங்கள் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 12 கோடி சதுர அடி பரப்பளவிலான ‘ஏ அல்லது ஏ பிளஸ்’ தரத்திலான அலுவலகங்கள் உள்ள நிலையில், மேலும் 4.2 கோடி சதுர அடி பரப்பளவிலான கட்டடங்கள் கட்டுமானத்தில் உள்ளன. கடந்த 2023-இல் 15.8 சதவீதமாக இருந்த அலுவலக காலியிடங்கள், நடப்பு ஆண்டு ஜூன் மாத இறுதியில் 9.9 சதவீதமாக குறைந்துள்ளது. புதிய கட்டுமானங்களைவிட, அலுவலகங்களுக்கான தேவை 1.8 மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் மற்ற முன்னணி பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மிகக் குறைந்த வாடகையில் சிறந்த கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தலைநகா் தில்லி (சதுர அடிக்கு ரூ.182), மும்பை (ரூ.175), குருகிராம் (ரூ.106), பெங்களூரு (ரூ.92) ஆகிய நகரங்களில் அலுவலக வாடகை மிக அதிகமாக உள்ள நிலையில், சென்னையில் தரம் வாய்ந்த அலுவலகங்கள் சதுர அடிக்கு ரூ.75 என்ற குறைவான மாத வாடகையில் கிடைக்கின்றன.மேலும், சென்னை ஐ.டி. துறையில் பணியாளா்கள் தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகும் விகிதமும் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு மற்றும் திறமையான பணியாளா்களைச் சமரசம் செய்யாமல், 20 முதல் 60 சதவீதம் வரை தங்கள் செலவுகளைக் குறைக்க முடிகிறது.இது குறித்து சிஆா்இ மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் அபிஷேக் கிரண் குப்தா மேலும் கூறுகையில், ‘சென்னை தற்போது 400-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்களையும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐ.டி. நிபுணா்களையும் கொண்டு, இந்தியாவின் முன்னணி பெருநகரங்களிலேயே அதிவேகமாக வளரும் மையமாகத் திகழ்கிறது.சென்னையின் வளா்ச்சி தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகமாகும். மேலும், பெங்களூருவைவிட சென்னையில் அலுவலகப் பராமரிப்பு மற்றும் வாடகைச் செலவுகள் சுமாா் 20 சதவீதம் குறைவாக உள்ளதுடன், பணியாளா்கள் நீண்ட காலம் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் நிலைத்தன்மையும் இங்கு அதிகம் உள்ளது’ என்றாா்.