சாலையோரக் கடைகளை முறைப்படுத்துவதில் சிக்கல்! விற்பனைக் குழு - கவுன்சிலர்கள் அதிகார மோதல்

Wait 5 sec.

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக விற்பனைக் குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் அதிகாரம் தொடர்பான மோதலால் அதன் செயல்பாடு முடங்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலையோரங்களில் அமைக்கப்படும் காய்கறி, உணவகம் போன்ற சிறிய கடைகளால் போக்குவரத்து நெரிசல், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. சென்னையில் 150 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகள் அமைக்கலாம் என்ற நிலையில், விதிமீறி 188 இடங்களில் அமைத்திருப்பது கண்டறியப்பட்டது.  இந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு மத்திய அரசு சாலையோரக் கடைகளை முறைப்படுத்தும் சட்டத்தை செயல்படுத்தியது. விற்பனைக் குழு அமைப்பு : மத்திய அரசின் சட்டம்,  உயர்நீதிமன்றத்தில் தாக்கலான மனு அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் தலா 15 பேர் கொண்ட விற்பனைக்குழு அமைக்கவும், அதில்  சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் 6 பேர் இடம் பெறுவதற்கான தேர்தலை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. அதனால் 2025- ஆம் ஆண்டு விற்பனைக்குழுவில் இடம்பெறும் சாலையோர வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது.  பொதுத் தேர்தல்களைப் போல வாக்குச்சாவடிகள் அமைத்து நடைபெற்ற தேர்தலில் 30 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் வாக்களித்து, 90 பேரைத் தேர்வு செய்தனர்.அதன்படி, ஒவ்வொரு மண்டல அளவில் அமைக்கப்பட்ட விற்பனைக் குழுவில் வட்டார துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 6 பேர், 1 மண்டல சுகாதார நல அலுவலர், 2 காவல் உதவி ஆணையர்கள், 1 செயற்பொறியாளர், 1 வர்த்தக சங்க உறுப்பினர், 2 தொண்டு நிறுவன உறுப்பினர்கள், 1 குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாநில அளவில் சென்னையில் மட்டுமே இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.கவுன்சிலர்கள் தலையீடு: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் இக்குழுவினர் தற்போது வரை 3 கூட்டங்களை நடத்தி அந்தந்தப் பகுதியில் சாலையோரக் கடைகள் அமைக்கும் இடம், அமைக்கக் கூடாத இடம் என அடையாளப்படுத்தி தடையுள்ள இடங்களில் கடைகளை அகற்றிவிட்டு, புதிதாக அனுமதித்த இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.    இப்பணிகள் பெசன்ட் நகர், திருவொற்றியூர்  உள்ளிட்ட இடங்களில் தொடங்கிய நிலையில், சிலர் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடுவதால், அவர்கள் தலையிட்டு, கடைகளை அகற்ற  எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால், சாலையோரக் கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கை முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.  சென்னை மாமன்ற ஜூலை மாத கூட்டத்திலும் விற்பனைக் குழுவினர் மீது திமுக உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.தலையீடு ஏன்?: இதுகுறித்து துணைமேயர் மு.மகேஷ்குமாரிடம் கேட்டபோது, " வார்டில் எந்த இடத்தில் கடைகள் அமைக்கலாம், அமைக்கக் கூடாது என அந்தந்த வார்டு உறுப்பினரிடம் கேட்டு செயல்படுத்துவதே நல்லது. போக்குவரத்து நெரிசலைக் காட்டி அமைதியான குடியிருப்புப் பகுதியில் கடைகள் வைத்தால் அந்தப் பகுதி மக்கள் அமைதி கெடுவதாக வார்டு கவுன்சிலர்களிடம்  முறையிடுகின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் கவுன்சிலர்கள் தலையிடவேண்டியுள்ளது  என்றார்."அதிகாரிகள் சட்டப்படி செயல்படவேண்டும்':இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் சங்க மாநிலத் துணைத்  தலைவரும், திருவொற்றியூர் பகுதி மார்க்சிஸ்ட் வார்டு உறுப்பினருமான ஆர்.ஜெயராமனிடம் கேட்டபோது, சாலையோரக் கடைகள் அமைவிடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் விற்பனைக் குழுவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், சில இடங்களில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட முயற்சிக்கின்றனர். கூட்டத்தையும் முறைப்படி நடத்தாமல் உள்ளனர் என்றார்.   கவுன்சிலருக்கு அதிகாரமில்லை: இப்பிரச்னை குறித்து மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்,கெüஷிக்கிடம் கேட்டபோது, விற்பனைக் குழுவுக்கான சட்டவிதிகளின் படியே சாலையோரக் கடைகள் முறைப்படுத்தப்படுகின்றன. குழுக் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு, கள ஆய்வுக்கு பிறகே, மண்டல வார்டு கவுன்சிலர் கூட்ட அனுமதி பெற்றே  கடைகள் இடமாற்றப்படுகின்றன. ஆனால், விற்பனைக் குழுவினரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை மட்டுமே விடுக்கலாம் என்றார்.சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம், ஐடிஎஸ் தொழில்நுட்ப செயல்பாடு, ஸ்மார்ட் வாகன நிறுத்தம் என மாநகராட்சி சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் சாலையோரக் கடைகள் முறைப்படுத்துதல் முக்கியமானது. எனவே, மாநகராட்சி கவுன்சிலர்கள் விற்பனைக் குழுக்களுக்கு ஒத்துழைத்து நெரிசலுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.விதிகள் கூறுவது என்ன?சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டப்படி மருத்துவமனைகள், போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் அருகே கடைகள் அமைக்கக் கூடாது. மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்களில் அவை சார்ந்த கடைகள் அனுமதிக்கப்படலாம் என விதிகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் தொகை விகிதாசாரப்படி சென்னையில் 2 லட்சம் சாலையோரக் கடைகள் வரை இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.