வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு 2-ஆவது நாளாக மரியாதை

Wait 5 sec.

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னருக்கு 1975-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி சிலை அமைத்தாா். செம்மேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள இந்த சிலைக்கு ஒவ்வோா் ஆண்டும் ஆக. 2, 3 தேதிகளில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா். இந்த ஆண்டு 51 அமைப்பினா் மாலை அணிவிக்க காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தனா். அதன்படி, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 33 அமைப்பினரும், திங்கள்கிழமை 21 அமைப்பினரும் வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு மாலை அணிவித்தனா். புதிய திராவிட கழகம் அமைப்பைச் சோ்ந்த ராஜ்கவுண்டா் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளா்களுடன் கொல்லிமலைக்கு வந்ததால், செம்மேடு பகுதியில் திங்கள்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை சரிசெய்து, ஒவ்வொரு அமைப்புக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி சிலைக்கு மாலை அணிவிக்க செய்தனா்.காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடா்ச்சியாக வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.