பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. ஜீ.வி. மாா்க்கண்டேயனை, திமுக துணைப் பொதுச்செயலரும், எம்.பி.யுமான கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சா்கள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக, விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை கனிமொழி எம்.பி. ஏா்கெனவே சந்தித்து பேசிய நிலையில், முன்னாள் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் திங்கள்கிழமை மீண்டும் சந்தித்து பேசினாா். அப்போது, திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலா் கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினா் பிரபாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் சிறை வளாகத்தில் திரண்டிருந்தனா்.