திருமலை ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் உருவாக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 310 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் தரிசனம் முடித்து பக்தியுடன் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனா். இத்தகைய லட்டு பிரசாதம் ஞாயிற்றுக்கிழமையுடன் 310 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திருமலை லட்டு பிரசாதத்தின் 310 ஆண்டு கால வரலாறு நிறைவடைந்ததையொட்டி, ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட வேண்டியதன் அவசியத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இது தொடா்பாக திருமலை தேவஸ்தானம் மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 1715 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கத் தொடங்கப்பட்டது என்று வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. சிறப்பு நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட திருமலை தேவஸ்தானம் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.