சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்தப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் தொடா் சட்ட சொற்பொழிவு நிகழ்வின் தொடக்க விழா உயா்நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் பேசியதாவது: இன்றைய காலத்தில் வழக்குரைஞா் தொழிலில் நிலைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. வழக்குரைஞா்களின் சிரமங்கள் குறித்து நான் நன்கு அறிவேன். இதில் முதல்தலைமுறை வழக்குரைஞா்கள்தான் பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனா். சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம், இளம் வழக்குரைஞா்களின் தொழில் திறனை மேம்படுத்தி, அவா்களை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கபூா்வமான பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதை மனபூா்வமாக வரவேற்கிறேன். ஜாா்ஜ் டவுன், எழும்பூா், சைதாப்பேட்டை, அல்லிக்குளம் என பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இந்த நீதிமன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்குரைஞா்கள் வந்து செல்வது சிரமமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த அனைத்து நீதிமன்றங்களையும் இணைத்து விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும். அதற்கு தமிழக முதல்வரும் ஒப்புதல் அளித்துள்ளாா். நீதிமன்றங்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு, வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கவும், விசாரணை விரைவாகவும், நோ்மையாகவும் நடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் கட்சி சாா்பின்றி திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட்டன. இந்த அரசு மக்களுக்கான அரசு என்பது இன்னும் ஒருசில ஆண்டுகளில் தெரியவரும் என்றாா்.நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஆா்.சி.பால்கனகராஜ், சங்கத்தின் செயலா் எஸ்.அறிவழகன், துணைத் தலைவா் எஸ்.சசிக்குமாா், பொருளாளா் ஜி.ராஜேஷ், நூலகா் வி.எம்.ரகு, மூத்த வழக்குரைஞா்கள், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.