தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத் துறை ஆகியவற்றில் உள்ள செவிலியா் பணியிடங்களை ரத்து செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 1,832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகா்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் 1,400-க்கும் குறைவான செவிலியா்கள் மட்டும்தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனா். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல. தவெக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளா்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியா்கள் இருக்க மாட்டாா்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால், செவிலியா் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியா் பணியிடங்கள் அனைத்தையும் உடனே நிரப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.