தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று (நவ. 28) இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விருதுநகர், தென்காசி, தேனி, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாள்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலத்தில் 81.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஏனைய பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 22 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.