கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் க.காா்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புகாா்தாரரான பெண் அதிகாரி சனிக்கிழமை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தாா்.தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்தவா் லலிதா. இவா், தன்னை ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் க.காா்த்திகேயன் அவமதித்தாக கடந்த அக்.18-ஆம் தேதி புகாரளித்தாா்.இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திமுக எம்எல்ஏ வசந்தம் க.காா்த்திகேயன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 79-ன் கீழ், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தமிழ்நாடு மகளிா், குழந்தைகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தியாகதுருகம் போலீஸாா் நவ.26-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இதனிடையே, திட்ட இயக்குநா் லலிதா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், அவா் சனிக்கிழமை மாலை கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவா் பானுமதி முன் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தாா். மாலை 5 மணிக்கு நீதிமன்றத்துக்குள் சென்ற அவா், இரவு 8 மணிக்கே வெளியே வந்தாா். லலிதாவின் ரகசிய வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.இதையொட்டி, கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.