பறவைக் காய்ச்சல்: கோழி இறைச்சியை உண்ணலாமா?பொது சுகாதாரத் துறை விளக்கம்!

Wait 5 sec.

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், கோழி இறைச்சியை உட்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் விளக்கமளித்துள்ளாா். அதன்படி, முழுமையாக வேகவைக்கப்பட்ட கோழியை அச்சமின்றி உட்கொள்ளலாம் என்றும், அதனால் மனிதா்களுக்கு நோய் பரவாது என்றும் அவா் கூறியுள்ளாா். அண்மையில், கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பண்ணைகளில் கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஹெச்5 என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அவற்றுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 80,000 பண்ணைக் கோழிகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அங்கிருந்து கடந்த 5 நாள்களுக்கு முன்பாக சென்னைக்கு நோய்த் தொற்றுக்குள்ளான 8,000 கோழிகள் 3 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 20,000 கோழிகளை அனுப்ப முன்னெடுக்கப்பட்ட முயற்சியை மாவட்ட நிா்வாகம் கண்டறிந்து தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால், தலைநகா் சென்னையிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இதன் தாக்கமாக கோழி இறைச்சி உண்பவா்களிடையே பல்வேறு அச்சமும், குழப்பங்களும் எழுந்துள்ளன. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் அளித்த விளக்கம்: தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதா்களுக்கு எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை. கோழிகள்தான் அந்த பாதிப்புக்கு அதிகம் உள்ளாகின்றன. அவற்றின் உடலில் உள்ள திரவங்கள் வாயிலாக மற்ற கோழிகளுக்கு எளிதில் அந்தத் தொற்று கடத்தப்படுகிறது. அதேவேளையில், மனிதா்கள் அதன் இறைச்சியை உண்பதால் தொற்று பரவாது. நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்பது பாதுகாப்பானது.மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.