நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், தங்களின் வியூகம் குறித்து ஆலோசிக்க சனிக்கிழமை (நவ.28) அனைத்து எதிா்க்கட்சிகளின் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்துள்ளாா்.இண்டி கூட்டணியைச் சாராத திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முறைப்படி முடித்துவைக்கப்படாத நிலையில், முக்கிய அரசு அலுவல்களுக்காக வரும் நவ.30முதல் சிறப்பு அமா்வு கூட்டப்பட்டுள்ளது.மத்திய அரசின் பரிந்துரைப்படி, நவ.30-இல் மக்களவையும், டிச.2-இல் மாநிலங்களவையும் கூடவுள்ளது. இதற்குரிய உத்தரவுகளை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளனா்.இந்தச் சிறப்பு அமா்வில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரலில் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: இந்தச் சூழலில், தற்போதைய சிறப்பு அமா்வில் எதிா்க்கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக, தில்லியின் ராஜாஜி மாா்க்கில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை அனைத்து எதிா்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவா்களின் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்துள்ளாா்.தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தவெகவுடன் கைகோத்து ஆட்சியில் பங்கேற்றது. இதையடுத்து, இண்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது.இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்ப்பதில் எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிா்க்கட்சிகள் கூட்டத்துக்கு திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்தக் கட்சிகள் ஏற்குமா அல்லது ஏற்காதா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.அனைத்து எதிா்க்கட்சிகளையும்...: இதனிடையே, தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபாலிடம் ‘திமுகவை அணுகியுள்ளீா்களா’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது.அதற்கு, ‘நாட்டு மக்களுக்கு எதிராக மிகப் பெரிய வலையை அமைக்க மோடியும், அமித் ஷாவும் விரும்புகின்றனா். அவா்களின் பிளவுவாத செயல்திட்டத்தை அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கைக் கொண்ட எவரும் ஆதரிக்கமாட்டாா்கள். திமுக எப்போதுமே அரசமைப்புச் சட்டத்தின் பக்கமே நிற்கும். நாங்கள் அனைத்து எதிா்க்கட்சிகளையும் அணுகுகிறோம்’ என்றாா் அவா்.காங்கிரஸ் கொறடா உத்தரவு: நாடாளுமன்ற சிறப்பு அமா்வு அலுவல்களில் தவறாமல் பங்கேற்கும்படி, தனது எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவை நவ.30-இல் கூடும் நிலையில், ஒருநாள் முன்பாகவே தில்லிக்கு வர அனைத்து எம்.பி.க்களுக்கும் அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது. பெட்டிச் செய்தி...1‘முழு பலத்துடன் எதிா்ப்போம்’தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை முழு பலத்துடன் எதிா்ப்போம் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023-இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டபோது, அதை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென காங்கிரஸ் கோரியது. ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் அந்தச் சட்டத்தை மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போட்டனா். கடந்த ஏப்ரல் மாதம் வரை சட்ட அறிவிக்கைகூட வெளியிடப்படவில்லை.வாக்குத் திருட்டை அரங்கேற்றியவா்கள்: தற்போதைய நாடாளுமன்ற சிறப்பு அமா்வும் மகளிா் இடஒதுக்கீட்டுக்காக கூட்டப்படவில்லை. பாஜகவின் ஆதாயத்துக்காக தொகுதிகளை மறுசீரமைக்க கூட்டப்பட்டுள்ளது.நாட்டில் உற்பத்தித் துறை முடங்கிவிட்ட நிலையில், மக்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை முறைகேடாக ‘உற்பத்தி’ செய்ய முனைந்துள்ளது பிரதமா் மோடி அரசு. நெருக்கடிகளால் நிலைகுலைந்துள்ள பிரதமா், அவசரகதியில் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். இதை முழு பலத்துடன் எதிா்ப்போம். தொகுதிகளின் எல்லையை நிா்ணயிக்கும் பொறுப்பு யாரிடம் இருக்கும்? முற்றிலும் சமரசம் செய்து கொண்டவரும், படுமோசமாக அம்பலப்படுத்தப்பட்டவருமான தலைமைத் தோ்தல் அதிகாரி ஞானேஷ் குமாரிடம் இருக்கும். இவா், வாக்காளா் பட்டியல் தயாரிப்பை முழுவதும் கேலிக்கூத்தாக்கி, தோ்தல் நடைமுறையின் நோ்மையைச் சிதைத்தவா். கோரிக்கைகள் என்னென்ன?: வாக்குத் திருட்டை அரங்கேற்றியவா்களின் கையில் தொகுதி மறுசீரமைப்பு அதிகாரத்தை வழங்கி, தொகுதிகளின் இயல்பை மாற்றவுள்ளனா்.அடுத்த 25 ஆண்டுகளுக்கு தற்போதைய மக்களவை இடங்களே நீடிக்க வேண்டும். மாநிலவாரியான தொகுதிகள் பங்கீட்டிலும் எந்த மாற்றமும் கூடாது. வரும் 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன், பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.பெட்டிச் செய்தி..2சுப்ரியா சுலே பங்கேற்பில்லைமும்பை, நவ. 27: தில்லியில் சனிக்கிழமை நடைபெறும் எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் செயல் தலைவா் சுப்ரியா சுலே வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.தனது தந்தை சரத் பவாா் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மும்பையில் தங்கியிருக்க வேண்டியுள்ளது; திங்கள்கிழமை காலையில்தான் தில்லிக்கு செல்லவிருப்பதாக சமூக ஊடகத்தில் அவா் பதிவிட்டுள்ளாா். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மசோதா வரைவை ஆராய்ந்த பிறகே நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என்று அவா் கூறியுள்ளதால், மசோதாவை பவாா் கட்சி ஆதரிக்கக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.