பாரதியாரின் நூற்றாண்டுப் பழைமையான பக்திக் கவிதையை அடிப்படையாகக் கொண்ட 'வருவாய் கண்ணா' பாடலுக்கு 'ராக் தேஷ்' பாணியில் இசை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு நவீன இசையை இசையமைப்பாளரும் பாடகருமான தேவன் ஏகாம்பரம், பாடகி சுபிக்ஷô ரங்கராஜன் (சுஷா) ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இதோடு, அந்தப் பாடல் இந்த ஆண்டு கிராமி விருதுகளுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, 'சிறந்த உலக இசை செயல்பாடு' எனும் பிரிவில் போட்டியிடுகிறது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'முதல் தமிழ்ப் பாடல் இதுவேயாகும். இந்தப் பிரிவில் 'வருவாய் கண்ணா' பாடல், ஐந்து முறை கிராமி விருது வென்ற ஏஞ்சலிக் கிட்ஜோ, ஃபாரெல் வில்லியம்ஸ் - குவாவோ ஆகியோரின் 'பேண்டோ' பாடலுடன் போட்டியிடுகிறது. இதற்கான பரிந்துரைகள் நவம்பர் 16-இல் அறிவிக்கப்பட்டன. இறுதிச் சுற்று வாக்குப்பதிவு 2026 டிசம்பர் 10 முதல் 2027 ஜனவரி 7 வரை நடைபெற உள்ளது. 69-ஆவது வருடாந்திர கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸில் உள்ள 'கிரிப்டோ.காம் அரினா' அரங்கில் பிப்ரவரி 7-இல் நடைபெற உள்ளது.நவீன 'வருவாய்' பாடலின் மகத்துவம்இந்திய-அமெரிக்க இசைக்கலைஞர் தேவன் ஏகாம்பரம் இசையமைத்துப் பாடிய இந்தப் பாடலை, சுபிக்ஷô ரங்கராஜனுடன் (சுஷா) இணைந்து பாடியுள்ளார். 'வருவாய் கண்ணா' பாடல் கண்ணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தீமைகளை அழிக்குமாறு இறைவனை 'வருவாய் கண்ணா' எனப் பாடல் அழைக்கிறது. இந்தப் பாடலில் வரும் அரக்கர்கள், காலனித்துவ ஒடுக்குமுறைகளை அவிழ்த்துவிட்ட ஆங்கிலேயர்களைக் குறிக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது வாரண்டுகளிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த பத்தாண்டுக் காலத்துக்குள் 'வருவாய் கண்ணா' பாடல் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.நீண்டகாலமாக கர்நாடக இசை மரபில் பாடப்பட்டு வந்த இந்தப் பாடலுக்கு தேவன் தந்திருக்கும் தற்போதைய நவீன வடிவம், கர்நாடக இசை மரபுகளை மேற்கத்திய இசைக்கருவிகள், 'நியோ-ஜாஸ்' ஆகியவற்றுடன் இணைத்து, 'ராக் தேஷ்' ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தேவன் ஏகாம்பரம்ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் 1999-ஆம் ஆண்டில் வெளியான 'காதலர் தினம்' திரைப்படத்தில் தேவன் ஏகாம்பரம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். 2010-ஆம் ஆண்டில் திரைப்பட இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.சுபிக்ஷô ரங்கராஜன் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஜாஸ் இசை பயின்றார். 2019-ஆம் ஆண்டில் ஏ.ஆர். ரஹ்மான், கிளிண்டன் செரேஜோ ஆகியோரால் தொடங்கப்பட்ட 'நெக்ஸா மியூசிக்' முன்னெடுப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கலைஞர்களில் சுஷாவும் ஒருவர். 2026 ஆகஸ்டில் இவர் தனது முதல் இசைத்தொகுப்பான 'லவ் லாங்குவேஜ்'யை வெளியிட்டார். இதில் ஆங்கிலம், தமிழில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.தேவன், சுஷா முதன்முறையாக கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 'இந்த அங்கீகாரம் தமிழ் மொழிக்கும், பாரதியாருக்கும், கர்நாடக இசைக்கும் கிடைத்த ஒரு சிறப்பான தருணம்' என்று தேவன் ஏகாம்பரம் பெருமைப்படுகிறார். தமிழ் இசையைப் பொருத்தவரை, கிராமி விருது கிடைக்கிறதோ இல்லையோ, 'வருவாய் கண்ணா' பாடல் கிராமி வரலாற்றில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துவிட்டது.