உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள தூணில் சனிக்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மலையடிவாரத்தில் உள்ள இந்து-இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.30 ஆண்டுகால கோரிக்கையும், சட்டப் போராட்டமும்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில், மலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் மிகவும் புகழ் பெற்றதாகும். கடந்த 1996-ஆம் ஆண்டு வரை உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில், மலை உச்சியில் உள்ள தூணிலேயே மகா தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.தீபத்தூண் அருகே தர்கா அமைந்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற காரணத்தால், ஒவ்வோர் ஆண்டும் கோயில் நிர்வாகம் சார்பில், உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தொடுத்த வழக்கில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.இதை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்த நிலையில், அப்போதைய திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. எனினும், கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற கார்த்திகை தீபத் திருநாளன்று, மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்து 5,600 போலீஸாரை குவித்ததோடு, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றியது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.மலை மீதுள்ள தூணில் ஒளிர்ந்த தீபம்: இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் மீண்டும் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் மலையில் 400-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பில், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில், மலை உச்சியில் உள்ள தூணில் சனிக்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.இதைத் தரிசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையிலிருந்தே திருப்பரங்குன்றத்தில் குவியத் தொடங்கினர். மாலையில் தீபம் ஏற்றப்பட்டதும், கிரிவலப் பாதையிலும், வீடுகளின் மாடிகளிலும், திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் அரோகரா, அரோகரா என முழக்கமிட்டு வழிபட்டனர்.வீடுதோறும் அகல் விளக்கேற்றிய மக்கள்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் மகா தீபம் ஏற்றுவதில் உள்ளூர் மக்களுக்கு விருப்பமில்லை என்ற கருத்து பரப்பப்பட்டு வந்தது. ஆனால், இந்தக் கருத்து தவறானது என்பதைக் காட்டும் விதமாக, திருப்பரங்குன்றம் மக்கள் தங்களது வீடுதோறும் அகல் விளக்குகளை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும், மலை மீதுள்ள தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மேளதாளங்களுடன் பூக்கள் தூவி உள்ளூர் மக்கள் வரவேற்றனர். திருப்பரங்குன்றத்தைப் பொருத்தவரை, இந்த ஆண்டு "எங்களுக்கு இரண்டு கார்த்திகை திருநாள்' என உள்ளுர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், தங்களது சொந்தச் செலவில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, இனிப்புகள், குடிநீர்ப் புட்டிகளை வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.தீப விவகாரம் குறித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் கூறியதாவது: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தியும், ஆவலும் எங்களுக்கும் உண்டு. ஆனால், போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவாக்கப்படுவதால் அச்சப்படுகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டால் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்லும் கனவுகள் பாதிக்கப்படும்; அன்றாட வாழ்வாதாரமும் முடங்கும் என்ற தயக்கத்தாலேயே நாங்கள் போராட்டங்களில் பங்கேற்பதில்லை. எங்களின் அமைதியைத் தவறாகச் சித்தரிக்கின்றனர் என்றனர்.மத நல்லிணக்கம்: இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் கூறியதாவது: "நாங்கள் திருப்பரங்குன்றத்தில் இந்து - இஸ்லாமியர் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையுடனேயே வாழ்ந்து வருகிறோம். வெளியிலிருந்து வரும் சில அமைப்புகளின் அழுத்தத்தாலேயே போராட்டங்களில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது' என்றனர்.சனிக்கிழமை நடைபெற்ற தீபத் திருவிழாவின்போது, மலையடிவாரத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் எந்தவித எதிர்ப்புமின்றி அமைதியாகத் தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டனர். இதேபோல, பக்தர்களும் மலையடிவாரத்தில் உள்ள தர்காவுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் மகா தீபத்தை தரிசித்துச் சென்றனர். வெளியிலிருந்து வரும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் உள்ளூர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தாமல் இருக்கும்வரை, திருப்பரங்குன்றம் என்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவே திகழும் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியாக அமைந்தது.