முனைவர் வீ. இராமராஜ்ஒரு தேசத்தின் வலிமை என்பது அதன் ராணுவ பலத்திலோ, பொருளாதார வளர்ச்சியிலோ மட்டுமே அடங்கி விடுவதில்லை. அதன் குடிமக்களிடம் எவ்வளவு அறிவு உள்ளது?, அது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் எந்த அளவுக்குச் சென்றடைந்துள்ளது? என்பதில்தான் ஒரு தேசத்தின் உண்மையான வலிமையும் எதிர்காலமும் அடங்கியுள்ளன.அறிவு பரவிய சமூகங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன; அறியாமை நிலவிய சமூகங்களில் அடிமைத்தனம், ஏமாற்றுதல், சுரண்டல் மற்றும் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளன என்பது வரலாறு உணர்த்தும் பாடமாகும். எனவே, அறிவாற்றல் பரவல் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான தேவை மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கான அடிப்படைத் தேவையாகும். மனிதனின் அறிவுசார் வளர்ச்சி ஒன்றோடொன்று தொடர்புடைய ஆறு பரிமாணங்களைக் கொண்ட தொடர்ச்சியான செயல்முறையாகும். தரவுகள் விவரங்களை வழங்குகின்றன. தரவுகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அந்தத் தகவல்களை ஆராய்ந்து, சரிபார்த்து, உண்மை எது என்பதை அறிய உதவுவது அறிவு. அறிவின் பொருளையும் அதன் பின்னணியையும் ஆழமாக உணர்வது புரிதல். கிடைத்த அறிவின் உண்மைத்தன்மையையும் பொருத்தத்தையும் ஆராய்ந்து, காரண காரியங்களை விளக்குவது பகுத்தறிவு. இறுதியாக, அந்த அறிவை எப்போது?, எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தீர்மானித்து, மனிதகுலத்தின் நன்மைக்காக வழிநடத்துவது ஞானம். இந்த ஆறு பரிமாணங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே முழுமையான அறிவாற்றலுக்கு அடித்தளமாக அமைகிறது. இந்தச் செயல்முறையில் தரவு தகவலாக ஒழுங்கமைக்கப்படுகிறது; தகவல் அறிவாக மாற்றப்படுகிறது; அறிவு புரிதலின் மூலம் ஆழப்படுத்தப்படுகிறது; புரிதல் பகுத்தறிவின்மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது; பகுத்தறிவு ஞானத்துக்கு வழிவகுக்கிறது. அறிவாற்றல் என்பது ஒருமுறை அடைந்துவிடக்கூடிய முடிவான நிலை அல்ல. தொடர்ந்து கற்றல், சிந்தித்தல், ஆராய்தல், அனுபவித்தல் மற்றும் திருத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் வாழ்நாள் பயணமாகும். இன்றைய எண்ம (டிஜிட்டல்) யுகத்தில் தகவல்கள் வெள்ளம்போலப் பெருகுகின்றன. ஆனால், தகவல் என்பது அறிவுக்கு இணையானதல்ல. தகவல்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அவற்றின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து, ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, சரியான முடிவுக்கு வருவதே அறிவியல் மனப்பான்மையாகும். புதிய ஆதாரங்கள் கிடைக்கும்போது தனது கருத்துகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதும், அறிவார்ந்த அணுகுமுறையின் அடையாளமாகும். அறிவாற்றல் பரவல் என்பது தனி மனித மேம்பாட்டுடன் முடிந்து விடுவதில்லை. அது குடும்பம், சமூகம், தேசம் என விரிவடைந்து இறுதியில் மனிதகுலத்தின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கிறது. அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கல்வி, வாசிப்பு, அறிவியல் விழிப்புணர்வு, சமூக அனுபவங்கள், அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவை அறிவாற்றல் வளர்ச்சிக்கான முக்கியமான வழிகளாகும். அறிவைப் பெறுவது தனி மனிதனின் வளர்ச்சி; அதைப் பகிர்வது சமூகத்தின் வளர்ச்சி; அது அனைவரையும் சென்றடைவது மனிதகுலத்தின் வளர்ச்சி. ஜனநாயகத்தின் வெற்றி என்பது தேர்தல்களை நடத்துவதிலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் மட்டும் அடங்கியிருக்கவில்லை. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம் இருந்தாலும், அந்த அதிகாரத்தைப் பொறுப்புடனும் பகுத்தறிவுடனும் பயன்படுத்துவதற்கான அறிவு அவர்களிடம் இருக்க வேண்டும். வாக்காளர்கள் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள், வேட்பாளர்களின் தகுதிகள், அரசின் செயல்பாடுகள், பொதுக் கொள்கைகள் மற்றும் தங்களது அரசமைப்புச் சட்ட உரிமைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். வாக்காளர்களின் அறியாமை, தவறான தகவல்கள் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைகள் அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்படும்போது ஜனநாயகத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அறிவாற்றல் பரவலின் முக்கியமான விளைவுகளில் ஒன்று, அறிவார்ந்த வாக்காளர்களை உருவாக்குவதாகும். தகவலறிந்து வாக்களித்தல் வலுவான ஜனநாயகத்துக்கும், அதன்மூலம் நல்லாட்சிக்கும் சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமைகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள், பொய்ச் செய்திகள், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் அறிவாற்றல் வளர்ச்சிக்குப் பெரும் தடைகளாக உள்ளன. உண்மையை ஆராயாமல் தகவல்களைப் பகிர்வதும், ஆதாரமற்ற கருத்துகளை நம்புவதும் சமூகத்தில் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்துகின்றன. மறுபுறம், ஏழைகள், கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு தரமான கல்வியும் அறிவுசார் வளங்களும் சென்றடையாமல் இருப்பது, அவர்களின் சமூகப் பங்கேற்பையும் உரிமைகளையும் பாதிக்கிறது. அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அதிகரிக்கின்றன. ஆகவே, அறிவாற்றல் பரவல் என்பது சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான முக்கியமான வழிமுறையாகும்.அறிவு ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்திருக்கும்போது, அது அதிகார ஆதிக்கத்துக்கும் சுரண்டலுக்கும் வழிவகுக்கக்கூடும். மாறாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் அறிவு சென்றடையும்போது, சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூக முன்னேற்றம் வலுப் பெறுகின்றன. ஜாதி, மதம், மொழி, பாலினம், பொருளாதார நிலை மற்றும் வாழ்விட வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வொரு மனிதருக்கும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான தகுதியை வழங்குவதுடன் நின்றுவிடாமல், பிற மனிதர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும். அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, மனிதநேயம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்ப்பதே உண்மையான அறிவுப் புரட்சியாகும். தகவல் தொழில்நுட்பம், இணையம், செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகமான வளர்ச்சியால் இன்றைய உலகம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இந்தத் தொழில்நுட்ப வாய்ப்புகள் வசதி படைத்தவர்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் மட்டுமே கிடைக்காமல், கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். எண்ம (டிஜிட்டல்) இடைவெளியைக் குறைத்து, தொழில்நுட்ப அறிவையும் அதைப் பயன்படுத்துவதற்கான திறனையும் அனைவருக்கும் வழங்குவது அரசின் முக்கியப் பொறுப்பாகும். அதேபோல், புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் நம்பகமான அறிவுசார் ஆதாரங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அறிவாற்றல் பரவலை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதில் அரசுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதுடன், சுயமாகச் சிந்திக்கும் திறனையும் வளர்க்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்ற அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளைப் பரப்ப வேண்டும். விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகள் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் கொண்டுசெல்லப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். உண்மையான, சரிபார்க்கப்பட்ட மற்றும் நம்பகமான தகவல்களை மக்களிடம் ஊடகங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். நூலகங்களை மேம்படுத்துதல், வாசிப்பு இயக்கங்களை முன்னெடுத்தல், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் அறிவியல் சிந்தனையை ஊக்குவித்தல் ஆகியவையும் அறிவாற்றல் பரவலுக்கான அடிப்படைக் கடமைகளாகும். அறிவாற்றல் பரவல் என்பது ஒருவரிடம் உள்ள அறிவை மற்றொருவருக்கு வழங்குவது மட்டுமல்ல; ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், உண்மையை ஆராயவும், சரியான முடிவுகளை எடுக்கவும் தேவையான திறன்களையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதாகும்.ஒருவரின் உண்மையான வளர்ச்சி என்பது அவர் எவ்வளவு செல்வம் சேர்த்துள்ளார் என்பதில் மட்டுமல்ல, அவர் எவ்வளவு அறிவைப் பெற்றுள்ளார், அந்த அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறார், பிறருடைய வளர்ச்சிக்கு எவ்வளவு பங்களிக்கிறார் என்பதிலும் அடங்கியுள்ளது. அதேபோல், ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, அதன் மக்கள் எவ்வளவு அறிவார்ந்தவர்களாகவும், சமத்துவ உணர்வு கொண்டவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாகியுள்ளனர் என்பதிலும் அடங்கியுள்ளது. அறிவைப் பெறுவது தனி மனித வளர்ச்சி; அறிவைப் பகிர்வது சமூக வளர்ச்சி; அறிவு அனைவரையும் சென்றடைவது மனிதகுல வளர்ச்சி. ஒருவரின் அறிவு அவரது வாழ்க்கையை மேம்படுத்தும், அறிவுப் பரவல் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மேம்படுத்தும்; உலகளாவிய அறிவாற்றல் பரவல் மனிதகுலத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்.கட்டுரையாளர்: தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினர்.