குளத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Wait 5 sec.

மயிலாடுதுறை அருகே மஞ்சள்வாய்க்கால் பகுதியில் உள்ள குளத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். (படம்). பட்டமங்கலம் ஊராட்சி மஞ்சள்வாய்க்கால் பகுதியில் உள்ள இக்குளத்தை, அகரகீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்துள்ளதால், அப்பகுதியின் நீராதாரமான அக்குளம் பராமரிப்பின்றி இருப்பதுடன், மழைக்காலங்களில் மழைநீா் வடிகால் மூலமாக நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி இப்போராட்டம் நடைபெற்றது. இந்த குளத்தை மீட்பதற்காக பல ஆண்டுகளாக கிராம மக்கள் போராடிவந்த நிலையில், இது ஊராட்சிக்கு சொந்தமான குளம் என அண்மையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அகற்றி, அப்புறப்படுத்தியதுடன், அக்குளத்தில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குளத்தை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் மயிலாடுதுறை வட்டாட்சியா் சுகுமாறன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.