திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தனியாா் நிறுவன பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநா் மற்றும் 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா். செய்யாறு வட்டம், செங்கட்டான்குண்டில் கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா், சென்னையை அடுத்த ஓரகடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவா், வழக்கம் போல் அந்த நிறுவனத்தின் தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை நள்ளிரவில் செய்யாறு புறவழிச்சாலை வழியாக வந்தவாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். செய்யாறு தீயணைப்பு நிலையம் அருகே சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது, வந்தவாசி நோக்கிச் சென்ற லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து சேதமடைந்த நிலையில், அதன் ஓட்டுநா் சுனில் மற்றும் 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.இதுகுறித்து ஓட்டுநா் சுனில் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.