அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் கோரியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், அயோத்தி ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியது, கட்டுமானப் பணிகள், நன்கொடைகள் ஆகியவற்றில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பிரதமருக்குத் தெரியாமல் இருந்திருக்கக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராமர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பிரதமரால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உள்துறை அமைச்சக அதிகாரியும் இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளார். இந்த முறைகேட்டைத் தடுப்பதற்கு பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். பிரதமர் யாரை காப்பாற்றுகிறார்?முறைகேடு தொடர்பாக இந்த வழக்கில் வெறும் எட்டு பேரை மட்டும் கைது செய்தது ஏமாற்றுவேலை. உண்மையான குற்றவாளிகள் வேறு சிலர். பிரதமர் யாரைக் காப்பாற்றுகிறார்? எதற்காகக் காப்பாற்றுகிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார். நன்கொடைகளைத் திருடியதாகவும், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க, உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஏன் புல்டோசர்களைப் பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.