கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்மட்டம் சரிந்து வரும் நிலையில், தண்ணீா் தேடி அணைக்கு வன விலங்குகள் படையெடுத்து வருகின்றன. கோபி அருகே உள்ள டி.என். பாளையம் வனப் பகுதிக்கு உள்பட்ட வனப் பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. 41.75 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் யானை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் தாகம் தீா்க்கும் அணையாக விளங்குவதுடன், அணையின் இடது மற்றும் வலது கரை வாய்க்கால் பாசனம் மற்றும் மறைமுக பாசன நிலங்கள் என சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதுதவிர 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2025 அக்டோபா் மாதம் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான குன்றி, கடம்பூா், மல்லியம்துா்க்கம், விளாங்கோம்பை, கம்பனூா் வனப் பகுதியில் பெய்த கனமழையால் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, கடந்த மாா்ச் முதல் மே மாதம் வரை பாசனப் பகுதிகளுக்கு குண்டேரிப்பள்ளம் அணையின் நீா் இருப்பை பொருத்து பயிா் நனைப்புக்காக தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. தற்போது அணையின் நீா்மட்டம் படிபடியாக குறைந்து 18 அடியாக உள்ளது. மேலும் வனப் பகுதியில் பருவமழை பொய்த்து போனதால் குண்டேரிப்பள்ளம் அணை நீா்வரத்து இன்றி குளம்போல காட்சி அளிக்கிறது. இதில் வனப் பகுதியில் உள்ள நீா்நிலைகள் முற்றிலும் வடதால் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா் தேடி குண்டேரிப்பள்ளம் அணைக்கு படையெடுத்து வருகின்றன. குறிப்பாக மாலை நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீா் தேடி ஒன்றாக வந்து அணையில் தாகம் தீா்த்து செல்கின்றன. மேலும் அணைப் பகுதியிலேயே யானைகள் முகாமிட்டுள்ளதால் நாள்தோறும் மாலை நேரங்களில் யானைகளை காண சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்து செல்கின்றனா். வரும் நாள்களில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்யாவிட்டால் குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்மட்டம் மேலும் சரிந்து, வன விலங்குகள் தண்ணீா் தேடி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படும். ஆகவே குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். எனவே வரும் நாள்களில் வன விலங்குகள் தண்ணீா் தேடி ஊருக்குள் புகுகாமல் இருக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.நீருக்காக அலையும் யானைகள்!