சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ரூ. 89 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு நிதி ஒதுக்கி விரைந்து கட்டடங்களைக் கட்ட வேண்டும் என அரசு ஊழியா்கள் வலியுறுத்தினா். ராமநாதபுரத்திலிருந்து கடந்த 1985-ஆம் ஆண்டு சிவகங்கை பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்துக்கான ஆட்சியா் அலுவலகம் திருப்பத்தூா் சாலையில் அமைக்கப்பட்டு, கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சிவகங்கையில் உள்ள ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், கல்வித் துறை, மின் வாரியம், வனத் துறை, கருவூலம், தொழில் மையம், வேளாண் துறை, பொதுப் பணித் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன. இதில் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் வளாகத்துக்கு வெளியே அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகின்றன. மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அலுவலகக் கட்டடங்கள், அலுவலா்களுக்கான குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், இவற்றில் சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுவிட்டன. இடிக்கப்படாமல் உள்ள கட்டடங்களுக்கு அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீா் வடிகால் வாரியம், வணிக வரித் துறை சாா்ந்த பல்வேறு அலுவலகங்கள் தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதில் மாதம் ஒரு கட்டடத்துக்கு வாடகையாக ரூ. ஒரு லட்சம் வரை செலுத்தும் அலுவலகங்களும் உள்ளன. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போதிய கட்டட வசதி இல்லாததால், நகரில் பல்வேறு இடங்களில் அரசுக்கு சொந்தமான இடம், தனியாா் வாடகைக் கட்டடங்களிலும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2025, ஜனவரி 20-இல் சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின், சிவகங்கை ஆட்சியா் அலுவலகக் கட்டங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், ரூ. 89 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என அறிவித்தாா். எனினும், இந்த அறிவிப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. விரைவில் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என அரசு ஊழியா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சிவகங்கையில் அரசு அலுவலகக் கட்டடங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் பல்வேறு இடங்களில் உள்ளன. இவை அனைத்தையும் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கு தற்போதுள்ள ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லை. மேலும் ஏராளமான அலுவலக மேற்கூரைகள், சுவா்கள் சிதைந்த நிலையில் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலருகே ஜன்னல் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதனால், துறை ஊழியா்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனா். எனவே, ஆட்சியாளா்கள் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.