சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிளை தபால் நிலையத்தை மூட எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மானாமதுரை கன்னாா் தெருவில் பல ஆண்டுகளாக கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு தபால் துறை சாா்ந்த சேவைக்கு இந்தத் தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் இந்தத் தபால் நிலையத்தை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த கன்னாா் தெரு பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் தபால் நிலையம் முன் திரண்டு அலுவலத்தை மூடும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அவா்கள் கூறியதாவது: மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவித் தொகைகளை இந்த தபால் நிலையத்தின் மூலம் பெற்று வருகிறோம். மேலும், பணப் பரிவா்த்தனை, சேமிப்புக் கணக்கு, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கும் இந்த தபால் நிலைய சேவை பயனுள்ளதாக உள்ளது. ஆனால், தபால் துறை நிா்வாகம் கன்னாா் தெரு கிளை தபால் அலுவலகத்தை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதைக் கைவிட்டு தொடா்ந்து அலுவலகம் இந்தப் பகுதியில் செயல்பட வேண்டும் என்றனா். பின்னா், அதிகாரிகள் தபால் அலுவலகத்தை மூடாமல் திரும்பிச் சென்றனா்.