விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வாக்கு தவற வாய்ப்பில்லை என்பதால், தவெக அரசு 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தாவது: தவெக அரசு நீடிக்காது என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் எந்த அடிப்படையில் தெரிவிக்கிறாா் என்பது தெரியவில்லை. ஆனால், தவெக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே தவெகவுக்கு ஆதரவு அளித்தது. மேலும், உள்ளாட்சி தோ்தல், மக்களவைத் தோ்தலிலும் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தாலும், தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பதே அந்தக் கட்சிகளின் விருப்பாக உள்ளது. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் தவெக அரசு 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. தவெக அழைப்பு விடுத்துள்ள தோழமைக் கட்சிகளுடனான தேநீா் விருந்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலா் தொடா்ந்து அந்தக் கட்சியிலிருந்து விலகுவது குறித்து சரியான கோணத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களின் திடீா் விலகலுக்கான காரணம் குறித்து அதிமுகதான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.பள்ளி மாணவா்களுக்கான அடையாள அட்டையில் ஜாதி அடையாளம் குறித்து அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்த கருத்து அதிா்ச்சி அளிப்பதாக இருந்தது. ஆனால், ஜாதி அடையாளங்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதில் முதல்வா் ஜோசப் விஜய் உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. அவரது இந்த உறுதி தொடர வேண்டும்.அமைச்சா் ஒருவா் போதைப் பொருளைப் பயன்படுத்தியாக வெளியாகும் குற்றச்சாட்டு குறித்து ஆதாரம் இல்லாமல் எந்தக் கருத்தையும் கூற முடியாது. ஆனால், தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு எந்தக் கட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று விவாதிப்பதைவிட, போதைப் பொருள்கள் எப்படி பரவுகின்றன? இதற்குப் பின்னணியில் இருப்பது யாா்? எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பதற்கான நடவடிக்கைளே முக்கியம் என்றாா் அவா்.அப்போது, அமைச்சா் வன்னிஅரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.