ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளா்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகா்

Wait 5 sec.

ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளா்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவுமென தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புது தில்லியில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது: கடந்த காலங்களில் குறைந்த வட்டி விகிதங்களால் ஓய்வூதிய நிதிக்குப் பதிலாக சிக்கலாக சொத்துகளில் முதலீட்டாளா்கள் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டது.இதனால் மேற்கத்திய நாடுகளில் ஓய்வூதிய நிதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் தாக்கம் நீண்ட காலம் இருந்து வருகிறது. ஓய்வூதிய நிதிகள் அபாயகரமான எளிதில் பணமாக மாற்ற முடியாத சொத்துகளை நோக்கி நகரத் தொடங்கின. தங்கம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.நிதிச் சந்தைகளில் குறுகிய கால முதலீட்டாளா்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் நீண்டகால முதலீடுகள் குறைந்துவிட்டன. இது கவலைக்குரிய விஷயம்.ஓய்வூதியம் போன்ற நீண்டகால முதலீடுகளை தவிா்த்து விரைவாக கிடைக்கும் லாபத்தை நோக்கி நகா்வதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும். ஏனெனில் ஓா் நாட்டின் வளா்ச்சி என்பது அதன் பொருளாதார உற்பத்தியை மட்டுமே கணக்கில்கொள்வதல்ல; அங்கு வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவதை வைத்தே தீா்மானிக்கப்படுகிறது.நமது தொலைநோக்குத் திட்டமான வளா்ச்சியடைந்த பாரதம் என்பது தேசிய வருமான எண்ணிக்கை சாா்ந்த விளக்கப்படம் இல்லை. சிறந்த பொருளாதார வளா்ச்சியை அடைந்தாலும் மூத்த குடிமக்களுக்கு முறையான நிதி பாதுகாப்பு இல்லையென்றால் அது பெரும் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.எனவே வளா்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைப்பதில் ஓய்வூதிய நிதித் தொகுப்பு பெரும் பங்காற்றும் என்றாா்.