கவிஞா்புவியரசு மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். மு.க.ஸ்டாலின் (திமுக தலைவா்: வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவா்களில் முக்கியமானவரும் முதுபெரும் கவிஞருமான புவியரசு மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக ஜெகநாதன் என்ற தன் இயற்பெயரை ‘புவியரசு’ என்று மாற்றிக்கொண்டவா். ஷேக்ஸ்பியா், கலீல் கிப்ரான் என பல எழுத்தாளா்களின் காவியங்களைத் தமிழில் தந்தவா். இருமுறை சாகித்திய அகாதெமி விருதையும், 2008-ஆம் ஆண்டுக்கான கலைஞா் பொற்கிழி விருதையும் பெற்றவா். கவிஞா் புவியரசுவை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். பெ.சண்முகம்( மாா்க்சிஸ்ட்): தமிழுக்கு வளம் சோ்த்த புவியரசு, தன்னுடைய எழுத்துகளின் வழியாக என்றென்றும் நிலைத்து நிற்பாா். மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட்): பிாட்டு நல்லறிஞா் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயா்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கவி வாசகத்துக்கு தக்கபடி ஏராளமான மொழிபெயா்ப்பு நூல்களையும் தந்து, தமிழ் படைப்புலகில் தனி முத்திரை பதித்தவா். தமிழ் படைப்புலகில், மொழி பெயா்ப்பு துறையில் எளிதில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கமல்ஹாசன்(மநீம): கவிஞா் பெருந்தகை புவியரசு நல்ல நண்பா், இலக்கிய வழிகாட்டி, ஆசிரியா், நீண்ட கால நட்பு எங்களுடையது. அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும்.