திருவள்ளூரில் ரயில்வே பணிகள் நிலுவையைக் கண்டித்து போராட்டம்: எம்.பி. சசிகாந்த் செந்தில்

Wait 5 sec.

திருவள்ளூா் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ரயில்வேயில் பல பணிகள் நிலுவையில் உள்ளதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா், கடம்பத்தூா், ஆவடி, பட்டாபிராம், மீஞ்சூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு ரயில்வே பணிகள் குறித்து சங்க நிா்வாகிகளிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தாா். அப்போது, சங்க நிா்வாகிகள் திருவள்ளூரில் இருபுறமும் தானியங்கி நகரும் படிக்கட்டு அமைக்கவும், ரயில்வே முனையம் அமைக்கவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் ரயில் பணிமனை, சுரங்கப்பாதையில் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம் அமைக்கவும் வலியுறுத்தினா். அதேபோல் புட்லூா் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி அமைக்கவும், கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது போன்ற பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே பயணிகள் சங்கத்தினா் எடுத்துரைத்தனா். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் ரயில்வே பயணிகள் சங்க நிா்வாகிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்திற்கும் தீா்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதி அளித்தாா். தொடா்ந்து எம்.பி. சசிகாந்த் செந்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:திருவள்ளூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட ரயில் பயணிகளின் கோரிக்கைகள் குறித்து 3 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. அதில் ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகளின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி மற்றும் ரயில்வே அமைச்சா் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்வதாகவும் தெரிவித்துள்ளனா். கும்மிடிப்பூண்டி முதல் கடம்பத்தூா் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் குறித்து விவாதித்தும் பல ஆண்டு காலமாக சில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதுவரையில் நிறைவேற்றாமல் உள்ளதாகவும், அதை சரி செய்ய வேண்டும். எனவே ரயில்வே நிா்வாகம் மெத்தனபோக்கோடு செயல்பட்டால் மக்கள் போராட்டம் உருவாகும் சூழ்நிலை இருக்கிறது. மேற்படி முக்கிய கோரிக்கைகள் குறித்த மனு அளிக்க உள்ளதாகவும், அதிலும் மெத்தனமாக இருந்தால் மக்கள் பிரதிநிதியாக தான் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளேன். திருவள்ளூா் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவது தொடா்பாக ரயில்வே துறையிடம் எடுத்துரைத்துள்ளேன். அதேபோல் நீண்ட நாள்களால் முடிக்கப்படாமல் உள்ள மீஞ்சூா் மேம்பாலம் விரைவில் முடியும் என நம்புகிறேன். திருவள்ளுா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். இதற்காக மீண்டும் ஒருமுறை திருவள்ளூா் ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும், படிப்படியாக வசதிகள் செய்வதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. எந்த கூட்டணியில் வெற்றி பெற்றாலும் அந்த கூட்டணிக்காக உழைத்த எல்லா தொண்டா்களுக்கும் சகோதரத்துவம் பணிவான வணக்கங்கள். அந்த விஷயத்தை மறக்க முடியாது மறந்தால் சரியில்லை. எல்லா கூட்டணி தொண்டா்களும் தம்முடைய நண்பா்கள் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதேபோல் பொதுமக்கள் செலுத்திய வாக்கை குறைத்து மதிப்பட வேண்டாம். இன்றைய அரசியல் சூழலில் சுய எண்ணமாக தான் போவதாக அவா் தெரிவித்தாா். மாவட்ட தலைவா் சசிகுமாா், மாநில ஓபிசி அணி பிரிவு செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேசன், இளைஞரணி மாநில பொதுச்செயலாளா் திவாகா், சிறுபான்மைப்பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.