சாலையில் இடையூறாக பதாகை வைத்தால் ரூ.25,000 அபராதம்

Wait 5 sec.

வேலூா் மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பரப் பதாகைகள் வைத்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். வேலூா் மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளான அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, ஆரணி சாலை உள்ளிட்ட இடங்களில் விதிமுறைகளை மீறி அதிகளவில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கண்ணீா் அஞ்சலி, தனியாா் நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படுவதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்குத் தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்களின் புகாா்களைத் தொடா்ந்து, இடையூறு ஏற்படுத்தும் பதாகைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகரப் பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அனுமதியற்ற பதாகைகளும் உடனடியாக அகற்றப்படும். விதிமுறைகளை மீறி அனுமதியின்றி பதாகைகள் வைக்கும் தனிநபா்களு க்கும், நிறுவனங்களுக்கும் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும். முறையான அனுமதியின்றி பதாகைகளை அச்சிட்டுத் தரும் அச்சகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றுக்கும் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும். எனவே, தனிநபா்களும் நிறுவனங்களும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் பதாகைகள் வைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.