ஸ்பெயினின் நட்சத்திர கால்பந்து வீரர் லாமின் யமால், “பிரான்ஸ் ஒன்றும் எங்களை விடச் சிறந்ததாக இருக்க முடியாது” எனக் கூறியது கால்பந்து உலகில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பிரான்ஸ் அணி 3-0 என ஸ்வீடனை வீழ்த்தியது. இந்த உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் பயப்படும் அணியாகவே பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்பெயினின் இளம் நட்சத்திர கால்பந்து வீரர் லாமின் யமால் எல் பார்டிடாஜோ டீ கோப் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது: யூரோஸ் போட்டிகளில் இருந்தே பிரான்ஸ் எங்களை வீழ்த்தியதில்லை. அவர்களால் எங்களை விட சிறப்பானவர்களாக இருக்க முடிந்ததில்லை. குரூப் சுற்று ஆட்டங்கள் அர்த்தமற்றவை. அதில் எந்த அணிகளும் சிறப்பானவை அல்ல என நினைக்கிறேன்.நிச்சயமாக, பிரான்ஸ் உயர்தரத்துடன் நல்ல ஃபார்மில் இந்த உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர் என நான் நினைக்கவில்லை என்றார். ஸ்பெயின் தனது முதல் போட்டியில் கேப் வெர்டே உடன் 0-0 என முடித்தது. அடுத்த போட்டியில் 4-0 என சௌதி அரேபியாவை வென்றது. உருகுவே இடமும் போராடி 1-0 என வென்றது. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஆஸ்திரியாவை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பையில் லாமின் யமால் முழுமையான உடல் நலத்துடன் இல்லை. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் முழுமையாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் அரையிறுதியில் மோத வாய்ப்பிருக்கின்றது. அப்படி வந்தால், லாமின் யமால் கூறியது உண்மையா பொய்யா என்பது உலகத்துக்கு நிரூபிக்கப்படும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஜெர்மனி அடித்த கோல் மறுக்கப்பட்டது ஏன்? ஃபிஃபா நடுவர் குழு விளக்கம்! FIFA World Cup 2026: "France can't be better than us," says Spain's Lamine Yamal