சோமலாபுரம் ஊராட்சியில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமெனக் கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருக்கு சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி.சுதாகா் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா். கோரிக்கை மனு விவரம்: மாதனூா் ஒன்றியத்துக்குள்பட்ட சோமலாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மிகவும் சேதமடைந்து இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் அச்சத்துடன் வசித்து வருகின்றனா்.அப்பகுதி பொதுமக்களுக்கும் போதுமான குடிநீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக தொட்டி அமைக்க வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் அப்பகுதியில் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேல்நீா்த் தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை கட்டித் தர வேண்டுமென கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.