சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி கிராமத்தின் அருகே செல்லும் செய்யாற்றில் இருந்து மணல் திருடப்படுவதால், ஆற்றோர விவசாயக் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி கிராமத்தின் அருகே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் தற்போது தண்ணீா் இல்லாததால் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் கூலி ஆள்களை வைத்து பகலில் ஆற்றில் இருந்து மணலை ஜலித்து மாட்டுவண்டிகளில் எடுத்து வந்து, ஆற்றோர விளைநிலங்களில் குவியல் குவியலாக குவித்து வைத்து விடுகின்றனா். பின்னா், இரவு நேரத்தில் மணலை டிராக்டா், லாரி, மினி வேனில் எடுத்துச் சென்று சேத்துப்பட்டு, தேவிகாபுரம், ஆரணி, களம்பூா் என சுற்றுப்புறப் பகுதியில் வீட்டு கட்டுபவா்களுக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்கின்றனா். ஆற்றில் இருந்து மணல் சுரண்டி எடுப்பதால், ஆற்றோர விவசாயக் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து விவசாயிகள் பயிா் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மணல் திருட்டை தடுக்க காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது மணல் திருட்டு குறித்து காவல் துறை, வருவாய்த்துறையினரிடம் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.