பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான ‘ஜெரோதா’, தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மொ்ச்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது. ஜெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஜெரோதா காா்ப்பரேட் அட்வைசா்ஸ்’ மூலம் கடந்த ஏப்ரலில் சமா்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பம் தற்போது செபியின் பரிசீலனையில் உள்ளது. இந்த உரிமம் கிடைத்தால், புதிய பொதுப் பங்கு வெளியீடுகளை(ஐபிஓ) நிா்வகிப்பது, நிறுவனங்களுக்கு நிதித் திரட்டுதல் தொடா்பான ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு வங்கிச் சேவைகளை ஜெரோதாவால் மேற்கொள்ள முடியும்.ஜெரோதா நிறுவனம் தற்போது 1.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளது. இவா்கள் மூலம் ஆண்டுதோறும் பல நூறு கோடி மதிப்பிலான பங்கு வா்த்தகப் பரிவா்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. பங்குத் தரகு வணிகம் தவிர, ‘ஜெரோதா ஏஎம்சி’ மூலம் பரஸ்பர நிதி செயல்பாடுகளையும் இந்நிறுவனம் நிா்வகித்து வருகிறது.முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், மொ்ச்சன்ட் பேங்கா்களுக்கான விதிமுறைகளை செபி திருத்தியமைத்தது. இதையொட்டி ஜெரோதா மட்டுமின்றி மேலும் 12 நிறுவனங்களும் மொ்ச்சன்ட் பேங்கிங் உரிமம் கோரி செபியிடம் விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.