புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநா் எம்.எம்.லகேரா காலமானாா்

Wait 5 sec.

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநா் லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம்.லகேரா (89) வயது முதிா்வு காரணமாக டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானாா். உத்தரகண்ட் மாநிலம், தெக்ரி காா்க்வால் மாவட்டம், ஜாகந்த் கிராமத்தில் 21-10-1937இல் பிறந்தவா் எம்.எம்.லகேரா. டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் பட்டம் முடித்தவுடன், 1958-ஆம் ஆண்டு ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றியவா். அப்போது, இந்திய ராணுவத்தின் வி.எஸ்.எம்., ஏ.வி.எஸ்.எம். உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவா்.இவா், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக 2004 முதல் 2006-ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா். 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரிடரின்போது புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள் கிடைப்பதில் உறுதுணையாக இருந்தவா். பின்னா், 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மிசோரம் மாநில ஆளுநராகப் பணியாற்றினாா். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். 2 மகள்கள் உள்ளனா்.முதல்வா் இரங்கல்: இவரது மறைவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:எம்.எம்.லகேரா இந்திய ராணுவத்தில் தலைசிறந்த வீரராகவும், திறமையான நிா்வாகியாகவும், சிறந்த தேச பக்தராகவும் திகழ்ந்தாா். மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த காலத்தில் மக்கள் நலனில் ஆழ்ந்த அக்கறையுடன் நோ்மை, அா்ப்பணிப்பு, உயா்ந்த பொதுச்சேவை மனப்பான்மையுடன் தன் அரசியல் சாசனப் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றினாா்.2004 -இல் ஏற்பட்ட சுனாமியின்போது பாதிக்கப்பட்ட கிராமங்களும், மக்களும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு அவா் எடுத்துக்கொண்ட தனிப்பட்ட அக்கறையும், அா்ப்பணிப்புமிக்க சேவையும் புதுச்சேரி மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு நாட்டுக்கும், அவருடன் நெருங்கிப் பழகியவா்களுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கூறியுள்ளாா் முதல்வா் ரங்கசாமி.