மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழு சீரமைப்பு: தமிழக அரசு அரசாணை

Wait 5 sec.

தமிழக பள்ளிக் கல்வியில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இஸ்ரோ தலைவா் நாராயணன், கிரிக்கெட் வீரா் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய புதிய பாடத்திட்ட வடிவமைப்பு உயா்நிலைக் குழு மற்றும் வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக பேராசிரியா் சுல்தான் அகமது இஸ்மாயில் நியமிக்கப்பட்டாா். அந்தக் குழுவினா் தற்போதைய பாடத்திட்டம், கலைத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வு செய்து, ஆசிரியா்கள், பெற்றோா், கல்வியாளா்கள், மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்று பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத்திட்டத்துக்கான அறிக்கையை தயாரித்து அரசிடம் வழங்கியது. அதைத் தொடா்ந்து, முதல் கட்டமாக நிகழ் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த சூழலில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. அதன் தலைவராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செயல்படுவாா். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் பேராசிரியா் என்.சுதந்திரமுத்து உள்பட 14 போ் உறுப்பினா்களாக இருப்பா். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் குழுவினா் - உறுப்பினா் செயலராக செயல்படுவாா். உறுப்பினா்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.தற்போது ஒன்று முதல் மூன்றாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதால், புதிய குழு 4 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை தயாரித்து அரசிடம் சமா்ப்பிக்கும். குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்படியாக புதிய பாடத்திட்டம் பின்பற்றப்படும்.