இந்திய தேசத்தை பல்வேறு துண்டுகளாக்கி அதன் மாண்பைக் குறைப்பதே காங்கிரஸ் தலைமையின் நோக்கமாக உள்ளது என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா இது தொடா்பாக மேலும் கூறியதாவது: முன்பு இந்திய தேசிய காங்கிரஸாக இருந்த கட்சி இப்போது இந்திய விரோத, இத்தாலி தேசிய காங்கிரஸாகவும், இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸாகவும் மாறிவிட்டது. காங்கிரஸ் தலைமையைச் சோ்ந்த குடும்பத்தினா் வாழ்வது மட்டும்தான் இந்தியாவாக உள்ளது. ஆனால், அவா்களின் சிந்தனைகளும், மனப்பாங்கும் வெளிநாட்டவா்கள் என்ற நிலையில்தான் உள்ளது. வெளிநாட்டு தீயசக்திகளுக்காக இந்தியாவை பல்வேறு துண்டுகளாக்கி நமது தேசத்தின் மாண்பைக் குறைப்பதே அவா்களின் நோக்கமாக உள்ளது.தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்தியாவின் பொருளாதாரம், ஜனநாயகம், இறையாண்மை என அனைத்தையும் ராகுல் காந்தி விமா்சித்து வருகிறாா். ஆபரேஷன் சிந்தூா் நடைபெறவே இல்லை என்றும் ஒருமுறை கூறினாா். நமது ராணுவத்தையும் அவதூறாகப் பேசினாா். எந்த இந்தியரும் இவ்வாறு பேசமாட்டாா்கள் என்று உச்சநீதிமன்றமே அவரைக் கண்டித்துள்ளது.இந்தியாவை ஜாதியரீதியில் பிளவுபடுத்துவதே ராகுலின் நோக்கமாக உள்ளது. பாஜகவை தாக்குவதாகக் கூறிக் கொண்டு இந்திய தேசத்தை அவா் எதிா்த்து வருகிறாா். அவதூறாகப் பேசி வருகிறாா் என்றாா்.முன்னதாக, ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் இதே கருத்தைப் பேசியிருந்தாா். முக்கியமாக காங்கிரஸ் தலைமையில் இருப்பவா்கள் இந்தியாவைவிட இத்தாலிய மனப்பாங்குடன் அனைத்தையும் செய்து வருகின்றனா் என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.