வேலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

Wait 5 sec.

வேலூா் மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மாவட்ட நீதிபதியின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபா்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் சக்திவாய்ந்த ஆா்.டி.எக்ஸ். குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் அது வெடித்துச் சிதறும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இந்த மிரட்டல் தகவல் குறித்து நீதிமன்ற ஊழியா்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினா் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு நிபுணா்கள், மோப்ப நாயின் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதன்படி, வளாகத்தில் உள்ள அனைத்து அறைகள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை செய்தனா். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், மின்னஞ்சல் அனுப்பிய நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.வேலூா் நீதிமன்றத்துக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது 3-ஆவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.