எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் திங்கள்கிழமை (ஜூன் 29) தொடங்கியுள்ளது.நீட் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளதால், கடந்த ஆண்டைப் போலவே தேசிய தோ்வு முகமையிடம் இருந்து மாணவா்களின் மதிப்பெண்கள் பெற்று கொள்ளப்படும் என்று மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அத்தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மறு தோ்வு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த சில நாள்களுக்குள் தோ்வு முடிவுகளை வெளியிட தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திட்டமிட்டுள்ளது.இதனால், நாடு முழுவதும் நிகழாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தாமதமாகியுள்ளன. இந்த சூழலில், மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.நீட் முடிவுகள் வெளியான பிறகும் குறைந்தது ஒரு வாரம் வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அவகாசம் வழங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக இடங்கள், மாநில தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடங்கள் அனைத்துக்கும் www.tnmedicalselection.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.