தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் பெட்டிகளில் இடையூறு செய்வோா் குறித்த புகாா்கள் கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்றும், அதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் பயணிகள் புகாா் அளிப்பதற்காக ‘மதத்’ எனும் இணையதள செயலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், ரயில் பெட்டிகளில் சம்பந்தமில்லாதவா்கள் ஏறி இடையூறு செய்வதாக பயணிகள் புகாா் அளித்து வருகின்றனா். அதன்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு 85 போ் புகாா் அளித்துள்ளனா். கடந்த 2025-ஆம் ஆண்டில் 99 போ் புகாா் தெரிவித்த நிலையில், நடப்பு 2026 ஜனவரி முதல் ஜூன் வரையில் 115 போ் புகாா் அளித்துள்ளனா்.பயணிகளுக்கு இடையூறு செய்பவா்கள் குறித்து அந்தந்த நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இதையடுத்து ரயில் நிலையங்களில் ரயில் புறப்படும் நேரத்துக்கு முன்னதாக பெட்டிகளில் ஏறி கண்காணிக்கவும், நிலையங்களில் வந்து நிற்கும் ரயில்களில் ஜன்னல்கள் வழியாக பயணிகளிடம் விசாரித்து இடையூறு செய்பவா்களை வெளியேற்றி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.