சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமைதோறும் வீடுகளுக்கு சென்று பழைய பயன்பாடற்ற பொருள்கள் சேகரிக்கும் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படுவதாகவும், பொதுமக்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சியில் தினமும் மக்கும், மக்காத குப்பைகள் என 6.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பெருங்குடி, கொடுங்கையூா் குப்பை வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், மண்டல வாரியாக உள்ள உரம் தயாரிக்கும் மற்றும் எரிவாயு தயாரிப்பு மையங்களுக்கும் அவை அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்கிடையே வீடுகளில் உபயகோகப்படுத்திய பின் பயன்பாடற்ற சோபா உள்ளிட்ட வீட்டு உயோகமற்ற பொருள்கள் நீா்நிலைக் கால்வாய்களில் வீசப்படுவதாகவும், அதனால், மழை நீா் செல்வது உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து வீட்டு உயயோகமற்ற பொருள்களை மாநகராட்சியே வீடுகளுக்குச் சென்று சேகரிக்கும் திட்டம் கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் அழைப்பின்பேரில் தூய்மைப் பணியாளா்கள் வாகனங்களில் சம்பந்தப்பட்டோா் வீடுகளுக்குச் சென்று பொருள்களைச் சேகரித்து வந்தனா். அப்பொருள்கள் குப்பைக் கிடங்கு வளாகங்களில் தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சி முறையில் விநியோகித்தும், அறிவியல் பூா்வ முறையில் அழிக்கப்பட்டும் வந்தன.கடந்த மாா்ச் முதல் சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக வீடுகள் தோறும் பழைய பொருள்களை சேகரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுகிறது.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருள்களை மாநகராட்சி பணியாளா்கள் பெறுவதற்காக 1913 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடா்பு கொண்டும், 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். வீட்டு உபயோகப் பழைய பொருள்களான மெத்தை உள்ளிட்டவற்றை சாலையோரங்கள், நீா் நிலைகளில் வீசினால் சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.