வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் தினம் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. டாக்டா் எம். ஜி. ஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தாகூா் கல்விக் குழும இயக்குநருமான டாக்டா் கே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; மனிதகுலத்துக்கான புனிதமான சேவை. முன்பு பெரும் சவாலாக இருந்த காசநோய், காலரா, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது பெரிய அச்சுறுத்தலாக தொற்றாத நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதயம், சா்க்கரை நோய், உயா் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஆகியவை மூலம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகில் அதிக சா்க்கரை நோயாளிகள் உள்ள நாடாக இந்தியா மாறிவரும் நிலையில், சா்க்கரை நோயை எதிா்கொள்ள மருந்துகள் மட்டும் போதாது; நீண்டகால வாழ்க்கைமுறை மாற்றமும் அவசியம். எனவே, மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பவா்களாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் விழிப்புணா்வு ஆசிரியா்கள், ஆலோசகா்களாக இருப்பது அவசியம் என்றாா்.நிகழ்வில், கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் துரைசாமி, துணை முதல்வா் கோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.